Nov 17, 2026 - 08:18 AM

மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (17) நடை திறக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது.
முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தினசரி 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிசம்பர் 27 ஆம் திகதியன்று மண்டல பூஜை நடைபெற்று அன்றுடன் நடை அடைக்கப்படும்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் திகதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
இந்த நிலையில், கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு குற்றாலம் அருவியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி, மாலை அணிந்து தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
மங்கல இசை மற்றும் பக்தர்களின் சரண கோஷத்தால் சந்நிதானம் களைகட்டியது.
இதனைத் தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மங்கல இசை முழங்க மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் கருவறையைத் திறந்து வைத்து நெய் தீபம் ஏற்றினார்.
தொடர்ந்து 18-ம் படி வழியே கீழிறங்கி சென்று ஆழிகுண்டத்தில் தேங்காய் விளக்கில் தீபம் ஏற்றினார். பின்பு ஐயப்பன் விக்கிரகத்தின் மேல் பூசப்பட்டிருந்த விபூதி, ருத்ராட்ச மாலை அகற்றப்பட்டு யோகநித்திரை நிலை மாற்றப்பட்டது.
இந்த விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதிய மேல்சாந்திகளாக சபரிமலைக்கு சுப்பிரமணியன் நம்பூதிரி, மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு தாமோதரன் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் இருமுடி கட்டுடன் பதினெட்டாம்படி வழியே ஏறினர். இவர்களை முன்னாள் மேல்சாந்திகளான பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோர் கரம் பிடித்து அழைத்துச் சென்றனர்.
பின்பு கருவறை முன்புள்ள சோபானம் எனும் புனித படிக்கட்டு அருகே அமர வைத்து தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் இருவருக்கும் சந்தன அபிஷேகம் செய்து புனிதநீர் தெளித்தார்.
பின்னர், அவர்களை கருவறைக்குள் அழைத்துச் சென்று மூல மந்திரத்தை காதில் உபதேசித்தார்.
முதல்நாளான நேற்று காலையில் இருந்தே நிலக்கல்லில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாலையில் நடை திறக்கப்பட்டதால் பிற்பகலில் இருந்தே பம்பைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல வழிபாட்டுக் காலம் தொடங்கியதால் சந்நிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி மட்டுமல்லாது வனப்பாதை மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களும் பக்தர்கள் வருகையால் களை கட்டியது

































