Nov 18, 2026 - 11:16 AM

ஆங்கில மொழியினைக் கற்கும் நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்காக, இரண்டு வருடங்களுக்கு வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள இலங்கை ஆசிரியர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பின் ஆரம்பத்தினைக் குறிக்கும் வகையில், முப்பத்து நான்கு அமெரிக்கர்கள் நேற்று (17) பீஸ் கோர் (Peace Corps) சேவை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
பீஸ் கோர் தன்னார்வத் தொண்டர்கள், வகுப்பறைகளில் இணைந்து கற்பித்தல், ஆசிரியர் செயலமர்வுகள், மற்றும் உள்ளூர் ஆசிரியர்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றினூடாக, அமெரிக்க ஆங்கில மொழித் திறன்களை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு உதவி செய்வார்கள். வகுப்பறைகளுக்கு அப்பால், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த குடும்பங்களுடன் வாழ்வார்கள், அமெரிக்க பாரம்பரியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள், இலங்கையின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வார்கள் மற்றும் அமெரிக்க - இலங்கை உறவுகளை பலப்படுத்தும் நீடித்த நட்புறவுகளைக் கட்டியெழுப்புவார்கள்.
புலத்சிங்ஹல நகரின் கொட்டபன்வில எனுமிடத்தில் நடைபெற்ற, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் பணிப்பாளர் நிமாலி பதுரலிய ஆகியோர் கலந்துகொண்ட ஒரு வைபவத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் அந்த முப்பத்து நான்கு அமெரிக்கர்களும் பீஸ் கோர் சேவை உறுதிமொழியினை ஏற்கும் நிகழ்வினை வழிநடத்தினார்.
2018 ஆம் ஆண்டு இலங்கையில் பீஸ் கோர் நிகழ்ச்சித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கைக்கு
வருகை தரும் நான்காவது குழுவான இக்குழு, இதுவரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழுக்களிலேயே மிகப்பெரியதாகும். தன்னார்வ தொண்டர்களின் சேவை அர்ப்பணிப்பையும், அவர்களை வரவேற்று ஆதரிப்பதில் இலங்கை ஆசிரியர்களும், அவர்களைத் தம்முடன் தங்கவைக்கும் குடும்பங்களும், சமூகங்களும் வகிக்கும் மிகவும் இன்றியமையாத பங்கினையும் இன்றைய இவ்வைபவம் அங்கீகரித்தது.
“அமெரிக்காவின் வலிமை எப்போதும் அதன் மக்களிடமே இருந்துள்ளது, அவர்களின் திறன்கள், அவர்களின் உறுதிப்பாடு மற்றும் முன்வந்து சேவை செய்வதற்கான அவர்களின் விருப்பம் ஆகியவற்றில் அது அடங்கியுள்ளது.” என தூதுவர் மயர் தெரிவித்தார்.
“தமது திறமைகளை இலங்கை வகுப்பறைகளுக்குள் எடுத்து வந்து, தாம் சேவை செய்யும் சமூகங்களின் ஒரு அங்கமாகமாறி, இந்த முப்பத்து நான்கு அமெரிக்கர்களும் அந்த பலத்தினை உலகில் மிக நீண்ட தூரம் எடுத்துச் செல்கின்றனர். அடுத்து வரவிருக்கும் இரண்டு வருடங்களுக்கு, கற்பித்தலையும் தாண்டி அதிக பங்களிப்பினை அவர்கள் செய்வார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களாகவும், நண்பர்களாகவும், அவர்களைத் தங்கள் இல்லங்களுக்கு வரவேற்கும் குடும்பங்களின் உறுப்பினர்களாகவும் அவர்கள் மாறுவார்கள். அவர்கள் அமெரிக்காவிற்குத் திரும்பும்போது, அமெரிக்க மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பன பற்றிய ஆழமான புரிதலையும், எமது நாட்டை மேலும் வலிமையாக்கும் நட்புறவுகள் போன்ற, தாங்கள் கற்பித்த பாடங்களைக் கொண்டு அளவிட முடியாத விஷயங்களையும் அவர்கள் இங்கே விட்டுச் செல்வார்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வியை பலப்படுத்துவதில் பீஸ் கோர் தன்னார்வ தொண்டர்கள் ஒரு மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். தமது அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் உள்ளூர் ஆசிரியர்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றினூடாக, மாணவர்கள் தமது ஆங்கிலத் தொடர்பாடல் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை
அவர்கள் உருவாக்குகின்றனர். அவர்களின் பங்களிப்பானது, மொழியினைக் கற்பிப்பதைத் தாண்டி, கலாச்சாரப் பரிமாற்றம், பரஸ்பர புரிதல் மற்றும் உலகளாவிய குடியுரிமை ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதாக அமைகிறது. இப்பங்காண்மையானது, இலங்கை மாணவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையினை வெளிப்படுத்துகிறது” என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினைச் சேர்ந்த, கல்விப் பிரதிப் பணிப்பாளரும், இலங்கையிலுள்ள பீஸ் கோர் அமைப்பிற்கான தொடர்பு அதிகாரியுமான ஆனந்த அரசு தெரிவித்தார்.
உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, சிங்கள மொழி, தமிழ் மொழி, இலங்கையின் கலாச்சாரம், மற்றும் கற்பித்தல் முறைகள் என்பன தொடர்பான ஒன்பது வார கால தீவிரப் பயிற்சியினை தன்னார்வ தொண்டர்கள் நிறைவு செய்தனர். ஆங்கில மொழிக் கல்வியானது நீண்ட காலமாகவே அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான ஒரு பாலமாக இருந்து, புதிய சிந்தனைகள், உயர்கல்வி மற்றும் உலகப் பொருளாதார வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து வருகிறது.
மாணவர்கள் தமது இலட்சியங்களைத் தொடர்வதற்கான திறன்களையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்வதற்கு உதவுவதற்காக உள்ளூர் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், பீஸ் கோர் தன்னார்வ தொண்டர்கள், அமெரிக்காவின் கற்பித்தல் அனுபவங்கள், படைப்பாற்றல் மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை இலங்கையின் வகுப்பறைகளுக்கு எடுத்து வருகிறார்கள். வகுப்பறைக்கு அப்பால், இலங்கையைச் சேர்ந்த புரவலர் குடும்பங்கள், தமது மொழி, பாரம்பரியங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து, இந்த அமெரிக்க தான்னர்வ தொண்டர்களை தமது இல்லங்களுக்குள்ளும், சமூகங்களுக்குள்ளும் வரவேற்கிறார்கள். இவ்வாறான தனிப்பட்ட தொடர்புகளின் ஊடாகவே, பீஸ் கோர் தனது மிக நீடித்த மரபுகளில் ஒன்றை விட்டுச் செல்கிறது, தன்னார்வ தொண்டர்கள் தமது நாட்டிற்குத் திரும்பிய பின்பும் நீண்ட காலம் நீடிக்கும் நட்புறவுகள், பரஸ்பர புரிதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்புகள் என்பன அதில் உள்ளடங்குகின்றன.
1961ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியினால் தாபிக்கப்பட்ட, அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மையான சர்வதேச தன்னார்வத் தொண்டு முகவரமைப்பான பீஸ் கோர், அமெரிக்க மற்றும் புரவலர் நாட்டின் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் செயற்திட்டங்களில் ஒத்துழைப்பதற்காக, ஆர்வமும் திறமையுமுடைய அமெரிக்கர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது. அது தாபிக்கப்பட்டது முதல் 2,50,000 இற்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் 144 நாடுகளில் பணியாற்றியுள்ளனர்.
1962 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளைத் தொடங்கிய பீஸ் கோர் அமைப்பின் ஊடாக, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களில் கிட்டத்தட்ட 600 அமெரிக்க தன்னார்வலர்கள் பணியாற்றியுள்ளனர். 1998 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள், அவற்றை மீண்டும் ஆரம்பிக்குமாறு 2016 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் இலங்கை கல்வியமைச்சின் பங்காண்மையுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. புதிதாக இணைந்து கொண்ட இந்த 34 தன்னார்வ தொண்டர்களுடன், தற்போது ஆங்கில மொழியினை கற்பதற்கு உதவி
செய்யும் வகையில் 57 அமெரிக்கர்கள் இலங்கை முழுவதும் சேவையாற்றுகின்றனர்.
இவ்வருடம் America250 உடன் ஒன்றிணையும் அதேவேளை, தன்னார்வ சேவையின் ஊடாக அமெரிக்காவிற்கும், உலகிற்கும் பயனுள்ள பங்களிப்பை வழங்குவதற்காகத் தனது நோக்கம், ஆர்வம் மற்றும் திறன்களை அர்ப்பணிப்பதன் 65 ஆவது ஆண்டு நிறைவை இம்முகவரமைப்பு கொண்டாடுகிறது.

































