Nov 18, 2026 - 06:16 PM

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் பொருட்கள் மீள் ஏற்றுமதித் (Transshipment) திறன் 10% வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கையாளப்பட்ட கொள்கலன் தொகையை, இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களின் தரவுகளுடன் ஒப்பிடுவதன் மூலமே இந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகம் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன் அலகுகளின் எண்ணிக்கை 5,825,909 ஆகும்.
இந்த ஆண்டின் குறித்த காலப்பகுதியில் அது 580,454 கொள்கலன் அலகுகளால் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய இம்முறை மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கொள்கலன்களின் எண்ணிக்கை 6,406,363 ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கையாளப்பட்ட 620,830 கொள்கலன் அலகுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 680,125 ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 59,295 கொள்கலன் அலகுகள் கூடுதலாகும் என்பதுடன், சதவீத அடிப்படையில் 9.6% வளர்ச்சியாகும்.
கொள்கலன் மீள் ஏற்றுமதியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, சர்வதேச 'அல்பலைனர்' (Alphaliner) நிறுவனத்தின் புதிய தரவரிசைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதலாம் பாதியில் உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் 20 ஆவது இடத்தை கொழும்புத் துறைமுகம் பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் கொழும்புத் துறைமுகத்திற்கு 26 ஆவது இடம் கிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































