Nov 18, 2026 - 08:04 PM

காலி - உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 05 ஆம் திகதி சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகை தந்து, உனவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது தெரியவந்ததற்கமைய, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கடந்த 12 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இரவு உணவு உண்பதற்காக எனக் கூறி அவரை முச்சக்கரவண்டியில் காலி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் குறித்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்டுள்ளதுடன், அதனை அவர் கடுமையாக நிராகரித்தமையால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்துக்கொண்டு 35,000 ரூபா கப்பப் பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் முச்சக்கரவண்டியில் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், சந்தேகநபர் வெளிநாட்டுப் பெண்ணின் முகம் மற்றும் தலையில் தாக்கியதுடன், அவரிடமிருந்த 20,000 ரூபா பணத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், அந்தச் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாகத் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததுடன், அவரது பயணப் பையைக் காப்பாற்றவும் உதவியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வெளிநாட்டுப் பெண் கடந்த 13 ஆம் திகதி உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது விசா காலம் முடிவடைந்ததன் காரணமாக அவர் தற்போது நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சாட்சியங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காலி தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையடித்தல், தாக்குதல் நடத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்படுதல் ஆகிய தீவிர குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் இன்று (19) காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































