Nov 18, 2026 - 11:14 PM

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் இன்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5% அளவில் இருந்தது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% க்கும் 4% க்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவது புள்ளிவிபரங்களின் ஊடாகத் தெளிவாகின்றது.
அத்துடன், 2027, 2028, 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% வீதமாகக் குறையும். எனவே, இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பது எமக்குத் தெளிவாகிறது.
அதேபோன்று, 8% வளர்ச்சி வேகமானது இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே கடந்து செல்லப்பட்டுள்ளது. அதாவது, 1978 ஆம் ஆண்டும், 2009 ஆம் ஆண்டு யுத்த நிலைமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 - 11 ஆம் ஆண்டுகளிலும் மீண்டும் 8% வளர்ச்சி வேகத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
எனினும், இவற்றைத் தொடர்ந்து பேணிச் செல்வது கடினமாக இருந்தது. கடந்த 40 - 50 வருடங்களைப் பார்த்தால், நாம் தொடர்ந்தும் எமது முதலீடுகளை அதிகரித்தோம். ஆனால், முதலீடுகளை அதிகரிக்க அதிகரிக்க நாம் அந்த வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதார வேகம் குறைகிறது. இன்றைய நிலையில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளது." என்றார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
"1960 இல் தென்கொரியாவின் தனிநபர் வருமானம் 156 டொலராக இருந்தது. இலங்கையின் தனிநபர் வருமானம் 146 டொலராக இருந்தது. ஆனால் இன்று இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள்; தென்கொரியாவில் இன்று அது சுமார் 36,200 டொலராக உள்ளது. இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த வருடம் 5,002 டொலராகும். அப்படியானால், தென்கொரியாவின் வருமானம் ஏழு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
எமக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு முந்திய அறிக்கை அல்லது அவ்வாறான முறையான திட்டமொன்றை சுயேட்சையாக வகுத்துக் கொடுத்தது 2013 ஆம் ஆண்டாகும். அன்று அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாட்டின் நிலைமை முற்றிலும் மாறியிருக்கும். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எமது அரசியல் உறுதியற்ற தன்மையே காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் மாறுகின்றன. இதனால் எம்மால் ஒரு கொள்கையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வது கடினமாகியுள்ளது. அடுத்துவரும் அரசாங்கம் அதனை புதிதாக ஆரம்பிக்கின்றது. அரசியல் உறுதியற்ற தன்மை உண்மையில் பாரியதொரு பிரச்சினையாகும். திட்டமொன்றைக் கொண்டுள்ளபோது அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்." என்றார்.

































