Jul 7, 2025 - 02:59 PM -
0
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
இதனால் ட்ரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், ட்ரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து பேசிய ட்ரம்ப்,
'இது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். குடியரசுக் கட்சியுடன் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிட்டனர். ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது, மேலும் மூன்றாம் கட்சியைத் தொடங்குவது குழப்பத்தையே அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்' என்று தெரிவித்தார்.