Jul 16, 2025 - 10:35 PM -
0
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். அந்த பஸ், கராச்சியில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பதற்றம் நிறைந்த கலாத் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய பாதுகாப்பு முகமைகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. பாதுகாப்பு படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கோழைத்தன தாக்குதல் என்று உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர், பஞ்சாப் நோக்கி சென்ற ரெயிலின் 2 பெட்டிகளில் பயணித்த 9 பேரை பலூசிஸ்தானின் ஜோப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கீழே இறக்கி விட்டு, சுட்டு கொன்றனர்.
இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்களால் பயணிகள் பஸ்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.