கிழக்கு
ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

Aug 31, 2025 - 09:10 PM -

0

ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஒரு வார காலத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

 

இதில், 13 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாகவும், இரு ஆண் சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் தெரிவித்துள்ளன.

 

மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில், சில தினங்களுக்கு முன் 17 வயது சிறுமி ஒருவர் வாந்தியெடுத்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது வைத்தியர்களால் கண்டறியப்பட்டது.

 

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோர் மீன்பிடித் தொழிலுக்காக கடற்கரைப் பகுதியில் உள்ள மீன் வாடியில் தங்கியிருப்பதாகவும், வீட்டில் சிறுமியும் அவரது சகோதரரும் மட்டும் தங்கியிருந்ததாகவும் தெரியவந்தது.

 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இரவு நேரத்தில் வீதியால் நடந்து வந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் தன்னை இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனை தொடர்ந்து அதே பொலிஸ் பிரிவில், 13 வயது சிறுமி ஒருவரை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சிறுவன், தான் இந்தச் சம்பவத்திற்கு காரணமில்லை என்றும், தனது நண்பரே குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளார். 

 

ஆனால், சிறுமி அளித்த முறைப்பாட்டில், கைதுசெய்யப்பட்ட சிறுவனே குற்றவாளி என உறுதிப்படுத்தியதை அடுத்து, அவர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

நீதவான், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மற்றொரு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, 17 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 


நீதவான், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இவ்வாறு, ஒரு வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05