Oct 18, 2025 - 03:59 PM -
0
பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு இந்த ஆண்டு தல தீபாவளி என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் படங்கள் முதன்முறையாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மூன்று படங்களுமே வெவ்வேறு ஜானரில் எடுக்கப்பட்ட படங்கள். இந்த மூன்று படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் மூன்று படங்களுக்குமே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பைசன் காளமாடன், டீசல் மற்றும் டியூட் ஆகிய படங்களுக்கு முதல் நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
தீபாவளி ரேஸில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன படம் டியூட். லவ் டுடே, டிராகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் இது என்பதால், இதற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. அதன்படி டியூட் திரைப்படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.3 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. மற்ற இரண்டு படங்களை விட அதிக வசூலை வாரிக்குவித்து முதலிடத்தில் உள்ளது டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி இருந்தார்.
டியூடுக்கு போட்டியாக வந்துள்ள மற்றொரு திரைப்படம் பைசன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இது மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். மேலும் பசுபதி, லால், அமீர், அனுபமா, ரெஜிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் டீசண்ட் ஆன வசூலை குவித்துள்ளது பைசன். அதன்படி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இப்படம் நேற்று (17) ரூ.2.52 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
தீபாவளி ரேஸில் களமிறங்கிய மற்றொரு திரைப்படம் டீசல். இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்திருந்தார். வட சென்னையை கலக்கி வந்த எண்ணெய் கடத்தல் மாஃபியா கும்பலை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இதில் வினய் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மந்தமான வசூலை பெற்றிருக்கிறது டீசல். அதன்படி, இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.24.5 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது.

