Oct 24, 2025 - 10:40 AM -
0
நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி சென்னையில் நேற்று (23) தமது 60 வது வயதில் காலமானார்.
நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர் மறைந்த நடிகை மனோரமா.
இவர், எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து கடந்த 1964-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர்.
இவர்களது ஒரே மகன் பூபதி. அவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா தீவிர முயற்சி எடுத்தார்.
விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து சில படங்களில் நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். ஆனாலும், பெரிதாக சோபிக்கவில்லை.
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த பூபதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. மறைந்த பூபதிக்கு, தனலட்சுமி என்ற மனைவி, ராஜராஜன் என் மகன், அபிராமி, மீனாட்சி ஆகிய மகள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

