Dec 19, 2025 - 05:53 PM -
0
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள் என இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) மதியம் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை கையளித்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வழங்கும் வகையில் இந்த நிவாரண பொருட்களை கை அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட குறித்த நிவாரண பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கும் பங்கிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட புயல் காரணமாக நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவம்பர் 28 ஆம் திகதி முதல் இந்திய மக்களினதும், அரசாங்கத்தினதும் உதவி ஊடாக இது வரை சுமார் 1,700 மெற்றிக் டன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது.
அந்த வரிசையிலே வடக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம்.
இந்த நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை வெகு விரைவில் வழங்க உள்ளோம். அதனை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.
இந்திய அரசாங்கம்,இந்திய மக்கள்,இந்திய தூதரகமும் என்றும் உங்களுடன் துணை நிற்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
--

