வடக்கு
நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது!

Dec 22, 2025 - 07:19 PM -

0

நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது!

நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எமது அரசாங்கம் முன்மாதிரியாக செயல்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நேற்று (21) நடைபெற்றது. 

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வட மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். 

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித் திட்டமாக இது அமைந்திருந்தது. 

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். 

இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா, மாவட்டங்களில் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், 6 பாடத்துறைகளின் கீழ் 1 முதல் 10 வரையான இடங்களைப் பெற்ற 274 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே அவர்கள் வரவேற்பு மற்றும் நோக்கங்களை தெளிவுபடுத்தும் உரையை நிகழ்த்தினார். 

இந் நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க,வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே,வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர். மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

வங்குரோத்து நிலையில் இருந்த நாடே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இருந்தன. எனவே, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்கு கடந்த ஒரு வருடமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு வருகின்றது. சிறந்தொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை நாம் செயலில் காட்டியுள்ளோம். 

பிரதமருக்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு 33 லட்சம் ரூபா, ஆனால் எமது பிரதமர் 4 லட்சம் ரூபாதான் பயன்படுத்துகின்றார். ஏனையவற்றை திறைசேரிக்கு அனுப்பி விடுகின்றார். 

பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்தால் , பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளம் மற்றும் அமைச்சருக்குரிய சம்பளம் கிடைக்கப்பெற்றது. சலுகைகளும் அப்படிதான். ஆனால் எமது ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை மட்டும் தாருங்கள், வேறு எதுவும் வேண்டாம் என அமைச்சர்கள் கடிதம் அனுப்பினர்கள். நாம் இரண்டு சம்பளம் பெறவில்லை. 

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் இருந்தன. அவற்றை நாம் பெறவில்லை. எமது சபாநாயகர்கூட சபாநாயகருக்குரிய அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்லவில்லை. 

கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. இவற்றை ஒழிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர் சமுதாயகத்தை நாம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது அரசாங்கத்துக்கு இருக்கும் மிக முக்கிய பொறுப்புகளில் இதுவும் ஒன்றாகும். நிச்சயம் போதைப்பொருளை ஒழிப்போம். 

அதேவேளை, எமது அரசாங்கத்தின் எண்ணக்கருவின் அடிப்படையில், பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்தும் இத்தகைய முயற்சிகளில் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் நிறுவப்பட்ட ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாக நன்மைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05