Jan 5, 2026 - 03:35 PM -
0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இலங்கை அரசும் குறிப்பாக இலங்கை கடற்படையும் தொடர்ந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாது இருக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (05) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர் விடையங்கள் தொடர்பாகவும், அவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், நீண்ட காலமாக நாங்கள் அவர்களின் அத்து மீறிய வருகை தடுப்பதற்காக போராட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம்.
பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம். கட்டுப்பாட்டு விடயங்களில் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை அந்த செயல்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நினைத்தாலும், மறு புறம் தமிழ்நாடு அரசானது ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அண்மையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது தமிழக முதலமைச்சர் அவர்கள் மத்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார்.
அவர் எதிர்கால அரசியலை மையமாக வைத்து இந்த ஆண்டில் வரக்கூடிய தமிழ் நாட்டின் அரசை மையப்படுத்தியதாக அவரது செயற்பாடுகள் இருக்கிறது.
ஆனால் ஒரு தரம் கூட அவர் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதை தடுப்பதற்கான எந்த அறிவிப்புகளையும் கொடுத்ததாக இல்லை.
அவர்தான் இந்த தொழிலை இந்த மீனவர்களை இந்த தொழில் முறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் செல்வதை ஊக்குவிக்கிறார்? என்று நாங்கள் இன்று யோசிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
குறிப்பாக நாங்கள் இந்த வேளையிலே தமிழக மீனவருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தயவுசெய்து நீங்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வராதீர்கள். தடை செய்யப்பட்ட தொழில் முறையை செய்யாதீர்கள்.
நீங்கள் செய்வதால் வடக்கு மீனவர்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் உங்கள் வருகை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இந்த சி.எப். ஸ்ரீலங்கா கடற்பரப்பில் நீங்கள் தொடர்ந்து வருவீர்களாக இருந்தால் இலங்கை அரசும் இலங்கை கடற்படையும் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை நாங்கள் தெளிவாக பதிவு செய்து கொள்கிறோம்.
மேலும் கடந்த வருடம் 2025 ஜூன் மாதம் அளவிலே கேரளாவில் நடுக்கடலில் தாண்டி போன கப்பல் தொடர்பாக பல விஷயங்களை நாங்கள் காண்கிறோம். அங்கு 643 கெண்டனர்கள் அந்த கப்பலில் இருந்து கடலில் தாண்டதாக அறிகின்றோம்.
ஆனால் 55 கொள்கலன்களில் பிளாஸ்டிக் துவல்கள் என தெரிய வருகிறது.ஏனையவை கெமிக்கல் அடங்கியதாக அங்கு குறிப்பிடப்பட்டது.
இந்த கெமிக்கல் அடங்கிய அந்த செயற்பாட்டில் இலங்கை கடல் குறிப்பாக வடக்கு கடல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது சம்பந்தமாக எந்த ஆய்வும் இதுவரை செய்யப்பட இல்லை.
குறிப்பாக தமிழ் நாடு தாண்டிய இந்திய எல்லைக்குள் அந்த கழிவுகள் கரையோரம் ஒதுங்குவதும் அந்த ஒதுங்கிய பொருட்களை அகற்றுவதற்கு சில நபர்களை சில மக்களைக் கொண்டு அரசு அதை அப்புறப்படுத்தி செயல்பாட்டை நாங்கள் பார்க்கின்றோம்.
ஆனால் இதற்காக இலங்கை அரசு அந்த கேரளாவில் தாண்ட கப்பலுக்காக முதல் கட்டமான இழப்பீட்டை பெற்றிருக்கின்றது. அந்த இழப்பீடுகள் கூட உண்மையில் மீனவருக்கு சென்றடைய வேண்டியது. ஆனால் அந்த இழப்பீடுகள் இன்று வரை அந்த மீனவர்களை சென்றடையவில்லை.
மீனவர் சார்ந்து செயற்படுகின்ற நிறுவனங்கள் இது சம்பந்தமாக பேசாது இருக்கின்றனர்.
இதனால் மீனவர்களின் கடல் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடலிலே வாழ்கின்ற உயிரினங்கள் குறிப்பாக பாலூட்டிகள் கடல் பசுவாக இருக்கட்டும் திமிங்கலமாக இருக்கட்டும் மீன் வகைகளாக இருக்கட்டும். இதன் ஊடாக அவை பல சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் இது தொடர்பான எந்த ஆய்வுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதற்போது இரண்டாம் கட்ட இழப்பீட்டிற்கான கோரிக்கையையும் இலங்கை அரசு முன்வைத்துள்ளது. முதல் கட்டமாக பெற்றுக் கொள்ளப்பட்ட இழப்பீடுகள் கூட பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சென்றடையவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக வட பகுதியில் உள்ள மீன்பிடி துறையை பிரதிநிதித்துவ படுத்துகின்ற மீனவ அமைப்புகள், வடபகுதி மக்கள் பிரதிநிதிகளும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
--

