Jan 10, 2026 - 03:37 PM -
0
நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார்.
"இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.
இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் கொள்கைக் கட்டமைப்பை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் திருமதி இவெட் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்:
"எமது நாட்டில் அத்தகையதொரு உறுதியான நிலையை உருவாக்க எம்மால் இதுவரை முடியவில்லை. எனவே, அரசாங்கம் தலையிட்டு தனியார்த் துறையையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தற்போது நாம் ஆங்காங்கே சில விடயங்களைச் செய்கிறோம். அதனாலும் பல நல்ல விடயங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து, எம்மால் நன்கு நிர்வகிக்கக்கூடியதாகவும், பின்த் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமைத்துக்கொண்டால், இதனை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். அரசாங்கத் தரப்பில் அந்தச் செயல்திட்டத்திற்கு இரண்டு குழுக்களை அல்லது ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது போன்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைத்துள்ளோம்."

