வடக்கு
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு - 2026

Jan 21, 2026 - 05:18 PM -

0

வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு - 2026

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026' நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (21) காலை மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த மாநாட்டை 'த மனேஜ்மன்ட் கிளப்' (TMC) - இலங்கை ஒழுங்கமைத்திருந்தது. 

மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், 

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண மாநகரில் நடைபெறும் இந்த நிகழ்வானது வெறும் ஒரு மாநாடு மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் ஒரு தீர்க்கமான மற்றும் மூலோபாயத் திருப்புமுனையை நாம் அனைவரும் ஒன்றுகூடிச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 

இயற்கை வளங்கள், மீளெழும் வல்லமை கொண்ட மனித மூலதனம் மற்றும் ஆழமான கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள போதிலும், நீண்ட காலமாக இம்மாகாணம் எமது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் மிகக் குறைந்தளவான பங்களிப்பையே வழங்கி வந்துள்ளது. இன்று, 'வளர்ச்சியை வலுவூட்டல், நுண்ணறிவுமிக்க புத்தாக்கங்கள்' (Empowering Growth, Insightful Innovations) என்ற தொனிப்பொருளின் கீழ், அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் பணியை நாம் ஆரம்பிக்கின்றோம். 

இலங்கை, பொருளாதார மீட்சியிலிருந்து நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகும் இத்தருணத்தில், இந்நிகழ்வானது மிகச் சரியான நேரத்தில் நடைபெறுகின்றது. எந்தவொரு மாகாணமும் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில், மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம்' என்ற தூரநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழேயே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. 

எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், வடக்கு மாகாணமானது எப்போதும் 'சிறப்புக்கான ஒரு நுழைவாயிலாக' திகழ்ந்து வந்துள்ளது. அந்தப் பெருமையை மீட்டெடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். 

விவசாயம் மற்றும் கடற்றொழில், சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் வலுசக்தி ஆகிய நான்கு மூலோபாயத் தூண்களில் கவனம் செலுத்துவதன் மூலம், எமது இளைய சமூகத்தின் திறமையையும், மூத்தவர்களின் அனுபவத்தையும், சர்வதேச மூலதனம் மற்றும் புத்தாக்கங்களுடன் இணைப்பதற்கான ஒரு வரைபடத்தை நாம் உருவாக்குகின்றோம். 

இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் நிலையான வேலைவாய்ப்புகள், துடிப்பான தொழில் முயற்சிகள் மற்றும் செழிப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், என்றார் ஆளுநர். 

விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றப்பட்டது. வரவேற்புரையை 'த மனேஜ்மன்ட் கிளப்' (TMC) - இலங்கைத் தலைவர் ரோஜர் தலயரத்னவும், உச்சிமாநாட்டின் நோக்கம் மற்றும் அறிமுக உரையை மாநாட்டின் செயற்றிட்டத் தலைவர் இந்திக கௌசால் ராஜபக்சவும் நிகழ்த்தினர். 

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05