Feb 2, 2026 - 11:32 AM -
0
பெண்களை மையமாகக் கொண்ட DFCC ஆலோகா என்ற தனது வங்கிச்சேவை மூலமாக பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோருக்கு நீண்ட காலமாக ஆதரவை வழங்கி வந்துள்ள DFCC வங்கி, கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற Prathibhabhisheka - பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2025 நிகழ்வின் வைர அனுசரணையாளராகவும், உத்தியோகபூர்வ வங்கிச்சேவை பங்காளராகவும் மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்துடன் (Women’s Chamber of Industry and Commerce - WCIC) கைகோர்த்துள்ளது.
தொடர்ந்து நான்காவது தடவையாகவும் இம்முறை Prathibhabhisheka விருதுகள் நிகழ்வுக்கு DFCC ஆலோகா ஆதரவளித்துள்ளது. இலங்கையிலும், பரந்த சார்க் பிராந்தியத்திலும் புத்தாக்கம், வேலைவாய்ப்பு, மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பங்களிக்கின்ற வர்த்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண் தொழில் முனைவோருக்கு அங்கீகாரமளிக்கும் ஒரு பிரதான மேடையாக இவ்விருதுகள் நிகழ்வு அமைந்துள்ளது. WCIC அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இவ்விருதுகள் நிகழ்வானது தடைகளைத் தாண்டும் திறன், தலைமைத்துவம், மற்றும் அளவிடப்படக்கூடிய வர்த்தக விளைவு ஆகியவற்றைக் காண்பிக்கும் பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்குகின்றது. இவ்வாறு அவர்களுடைய சாதனைகளை எடுத்துக்காட்டுவதன் மூலமாக, பெண்களை மென்மேலும் தொழில்முனைவுகளை மேற்கொள்வதை ஊக்குவித்து, நாட்டில் பரந்த அளவில் கைத்தொழில் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இம்முயற்சி முக்கிய பங்காற்றி வருகின்றது.
பெண் தொழில்முனைவோர் தொடர்பான யதார்த்தங்களை பின்னணியாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வங்கிச்சேவையான DFCC ஆலோகா இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ வங்கிச்சேவை பங்காளராக இணைந்துள்ளதன் மூலமாக பொருளாதாரத்தில் பெண்களைப் பங்குபற்றச் செய்வதில் தான் காண்பிக்கும் அர்ப்பணிப்பை DFCC வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெண்கள் தலைமையிலான வணிக முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்து, நிலைபெறச் செய்து, மற்றும் விரிவுபடுத்த இடமளிக்கும் வகையில், எளிதில் பெற்றுக்கொள்ளும் வசதி, ஆலோசனை உதவிகள், மற்றும் நீண்ட கால கூட்டாண்மை ஆகியவற்றைக் கொண்ட பிரத்தியேக நிதித் தீர்வுகளை DFCC ஆலோகா ஒன்றிணைத்துள்ளது.
DFCC வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமால் பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து வெளியிடுகையில், “பெண் தொழில் முனைவோர் தமது வர்த்தக முயற்சிகளை நிலைபெறச் செய்யும் வழியில் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக அவர்கள் மத்தியில் முட்டுக்கட்டைகளை அகற்றி, நடைமுறைக்கு அமைவான வழிமுறைகளைத் தோற்றுவிக்கும் தெளிவான நோக்கத்துடன் DFCC ஆலோகா தோற்றுவிக்கப்பட்டது. தலைமைத்துவம், புத்தாக்கம், மற்றும் தடைகளைத் தாண்டும் ஆற்றல் ஆகியவற்றினூடாக பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்கி வருகின்ற பெண்களில் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை WCIC மற்றும் Prathibhabhisheka விருதுகள் ஆகியவற்றுடனான எமது தொடர்ச்சியான கூட்டாண்மை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.”
மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி கயனி டி அல்விஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நற்பேறு கொண்ட வர்த்தக முயற்சிகளைக் கட்டியெழுப்பியுள்ள அதேசமயம், கட்டமைப்பு ரீதியான மற்றும் சமூக ரீதியான சவால்களை வெற்றிகரமாக தாண்டியுள்ள பெண்களுக்கு அங்கீகாரமளிப்பதற்காக Prathibhabhisheka விருதுகள் வழங்கப்படுகின்றன. பெண் தொழில்முனைவோர் அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்கள் தமது இலட்சியங்கள் மற்றும் கனவுகளை நனவாக்க வழிவகுக்கும் நிதித் தீர்வுகளையும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் DFCC ஆலோகா உடனான எமது கூட்டாண்மை இதற்கு வலுவூட்டுகிறது.”
குறிப்பாக பெண்கள் தலைமையிலான வணிக முயற்சிகளுக்கு நிதி ஆதரவு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும் முயற்சிகளை DFCC ஆலோகா மூலமாக DFCC வங்கி தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. அனைவரையும் உள்ளடக்கும் சூழலைக் கட்டியெழுப்ப இடமளிப்பதில் தனது வகிப்பாகத்தை இதன் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றது. அங்கீகாரம் மற்றும் நிலையான நிதி வாய்ப்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றை ஒன்றிணைத்து, தொழில் முயற்சிகளில் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்துவதில் தமக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ள நோக்கத்தை WCIC உடனான இக்கூட்டாண்மை பிரதிபலிக்கிறது.
இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தை மேம்படுத்துவதில் பெண் தொழில் முனைவோர் ஆற்றும் முக்கியமான பங்களிப்பை Prathibhabhisheka - பெண் தொழில் முனைவோர் விருதுகள் 2025 நிகழ்வு மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ள அதேசமயம், நடைமுறை ரீதியான, அனைவரையும் அரவணைக்கின்ற நிதித் தீர்வுகள் மூலமாக பெண் தொழில் முனைவோரை முன்னேற்றுவதில் அர்ப்பணிப்புள்ள வங்கிச் சேவைக் கூட்டாளர் என்ற DFCC ஆலோகாவின் ஸ்தானத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

