Feb 4, 2026 - 09:00 AM -
0
நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தயார் - ஜனாதிபதி அறியாமைக்குப் பதிலாக அறிவுக்கும், பழைய தப்பெண்ணங்களுக்குப் பதிலாக முன்னேற்றத்திற்கும், பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமைக்கும் முன்னுரிமை அளிக்கும் புதிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
78 வது சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
பன்முகத்தன்மையை மதித்து, நாட்டை ஒரே இலங்கை தேசமாகக் கட்டியெழுப்புவோம்.
"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருள் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிறுவுவதன் மூலம் உயிர் பெறுகிறது.
சுற்றாடல் கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்கும் அபிவிருத்திப் பாதை எமது எதிர்பார்ப்பு அல்ல.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் நோக்கம், பொருளாதாரத்தின் நன்மைகள் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதாகும்.
தாய்நாட்டிற்கு அதிக வெற்றிகளைக் கொண்டுவரும், புதிய பரிமாணத்துடன் கூடிய சர்வதேச உறவுகளை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.
78 ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். 133 வருட கால மிகவும் குரூரமான நெருக்கடி நிறைந்த கொள்ளைக் கூட்டத்தின் காலனித்துவ ஆட்சியின் பின்னர் 1948 இல் சுதந்திரம் கிடைத்த வருடமாகும்.
அதே போன்று பல நூற்றாண்டுகள் காலனித்துவத்திற்கு எதிராக எமது மூதாதையினர் தமது இரத்தம் கண்ணீர் வியர்வையை இந்த தாய்நாட்டிற்காக அர்ப்பணித்தார்கள்.
அன்று எமது மூதைதையினர் திடஉறுதியுடனான நம்பிக்கையுடனான போராட்டத்தின் பலனாக எமக்கே தனித்துவமான இறைமையின் உரிமை கிடைத்தது.
1948 என்பது பல்வேறுபட்ட அர்ப்பணிப்புகள் செய்த எமது படையினரின் மற்றும் மூதாதையினரின் வெற்றியின் மற்றும் வீரத்தின் அடையாளமான வருடமாகும்.
குறிப்பாக நாம் வாழ்வில் பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுப்பதை அனைவரும் அறிவோம்.பலர் தங்களுக்காக போராடுகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அது அரிதான விடயமன்றி அது பொதுவான விடயமாகும். ஆனால் யாராவது தாய்நாட்டுக்காக அதே போன்று எதிர்கால சந்ததிக்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடுவதாக இருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்களாக மாறுவதை தடுக்க முடியாது.
அவர்கள் மிகவும் உயர்வான பணியில் ஈடுபடுகின்றனர். நாம் இன்று கால்பதித்துள்ள இந்த பூமி தாய்நாட்டிற்காக போராடிய எமது மக்களின் எதிர்காலம் மற்றும் சுபீட்சத்திற்காக போராடிய எமது மூதாதையினர், எமது சகோதர சகோதரிகளின் இரத்தம்,கண்ணீர் மற்றும் வியர்வையினால் இந்த பூமி ஈரமாகியுள்ளது.
அவர்கள் எமது இதயங்களில் வீரத்தின் உயர்ந்த இடத்தில் குடிகொண்டுள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
எனவே இன்றைய தினத்தில் குறிப்பாக எமது தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் மக்களின் உயர்ந்த சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கு எமது மரியாதையையும் கௌரவத்தையும் அளிக்க வேண்டும்.நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் 78 வருடங்கள் பயணித்துள்ளோம்.
ஆனால் எமது சுதந்திரத்தின் மிக முக்கியமான பணி சுதந்திரம் முழுமையடைவது நாம் எந்தளவு பொருளாதார ரீதியில் எந்தளவு சுதந்திரம் பெறுகிறோம் என்ற காரணியின் அடிப்படையிலே என நான் கருதுகிறேன்.
பூரணமான சுதந்திரம் தொடர்பான போராட்டம் இன்னும் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்தப் போராட்டம் எமக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
குறிப்பாக இவ்வருட சுதந்திர தினத்தின் தொனிப் பொருள் 'இலங்கையை கட்டியெழுப்புவோம் ' என்பதாகும். நாம் இலங்கையின் சுயாதீனத்தன்மை, இறைமை,எமது சுதந்திரம் ஆகிய மும்மூர்த்தியின் மேல் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.
அதனை மீளக் கட்டியெழுப்புகையில் எமது தாத்பரியம் என்னவாக இருக்க வேண்டும். நாம் மிகவும் உயர்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்
எமது மூதாதையினர் அந்தக் காலத்திற்கு உகந்த வகையில் அந்தக் காலப்பகுதியின் இருப்பிற்கு ஏற்றவாறு மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருந்ததை எமது வரலாற்று ரீதியான தகவல்கள் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. நாம் பெருமை மிக்க வரலாற்றை கொண்டுள்ள தேசமாகும்.
அதேபோன்று அன்மைக்கால வரலாற்றில் நாம் ஒதுக்கவேண்டிய பல விடயங்கள் உள்ளதோடு நாம் உள்வாங்கவேண்டிய பெருமளவான விடயங்களும் உள்ளன. அதனால் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதை தாய்நாட்டுடனான பிரிக்கமுடியாத தொடர்புகளாகும்.
எமது தாய்நாட்டை கட்டியெழுப்புகையில் வரலாற்றினால் வழங்கியுள்ள முக்கிய தாற்பரியத்தை இந்த பூமியில் மீள ஸ்தாபிப்பதற்கான பாதையே நாம் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பாதையாகத் தெரிவு செய்யப்படும்.
அது வெறுமனே தாய்நாட்டின் வேர்களை அழிக்கும் தேசத்தின் சாரத்தை ஒழிக்கும் பொருளாதார மார்க்கமல்ல. எமது தாய்நாட்டினதும் எமது தேசத்தினதும் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நவீன இலங்கையொன்றை கட்டியெழுப்பும் பாதைக்கு நாம் பிரவேசிக்க வேண்டும்.
சுதந்திரத்தின் பின்னரான 78 வருடங்களில் வெற்றி தோல்வி இரண்டும் உள்ளது. நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. நாம் ஒருபோதும் தீயவற்றை ஒதுக்க தயங்க மாட்டோம்.
அதேபோன்று ஒருபோதும் நல்லவற்றை உள்வாங்குவதற்கு அஞ்சப் போவதில்லை. அதனால் கடந்த கால செழிப்பான விடயங்களின் அடிப்படையில் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கும் உங்களுக்கும் இருப்பதாக நம்புகிறேன்.
நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்போகிறோம்? முதலில் நாம் எம்மிடமுள்ள சாத்தியங்கள்,திறமைகள்,பலங்களை வரிசைப்படுத்தில் எம்வசமுள்ள பிரதான பலம் எதுவாக இருக்கும்?நாம் பெரும் சமுத்திர வலயத்திற்கு உரித்துடையவர்கள் என்று கூறலாம்.
சிறந்த காலநிலை வலயத்தில் அமைந்துள்ளோம் என்று கூறலாம். இயற்கை வளங்களினால் போசிக்கப்ட்டுள்ளதாக எமக்கு கூற முடியும். ஆனால் இவை அனைத்தையும் விட மனித வளமே உயர்வான வளம் என நாம் நம்புகிறோம்.
எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான திடஉறுதிக்கு வருவோமானால் எமது மனிதவளம் உலகில் உள்ள எந்தவொரு தேசத்துடனும் போட்டிபோடக் கூடிய சகல வகையிலும் பூரணத்துவமான மனித வளமாக மாற்றியமைக்க வேண்டும்.
அறியாமைக்குப் பதிலாக அறிவையும் பழைய பாதகங்களுக்கு பதிலாக முன்னேற்றத்தையும் பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்ட நவீன மனித வளத்தை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக அதில் கலை,இலக்கியம்.வரலாறு அதேபோன்று புதிய தொழில்நுட்பம் மற்றும் கல்வி என்பன இந்த மனிதவளத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதை நாம் அனைவரும் அறிவோம்.
அவ்வாறானால் எமது நாட்டில் முன்னேற்றகரமான மனித வளத்தை எதனால் கட்டியெழுப்பப்போகிறோம். அறிவு, கருணை, நவீன தொழில்நுட்பத்தை இணைத்துக் கொள்வதன் ஊடாக மேன்மையான மனித வளத்தை உருவாக்க வேண்டும்.
அதனை உருவாக்குவதற்கு எமது கல்வித்துறையில் பாரிய பரிமாற்ற யுகத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம். நவீன மனிதனை உருவாக்கும் முயற்சிக்கு பழைய பாதகங்களினால் எந்தளவு இடையூறு செய்தாலும் அவை அனைத்திற்கும் எதிராக நவீன அறிவு, நவீன தொழில்நுட்பம். நவீன மனிதனை உருவாக்கத் தேவையான பரிமாற்றத்திற்கான பணியை மேற்கொள்ள நாம் தயார்.
அதற்காக எமது நாட்டு பொதுமக்களின் ஒத்துழைப்புள்ளது என நம்புகிறோம். அதே போன்று அடுத்த முக்கிய விடயம் மனித வளம் எமக்கு முக்கிய பலமாக உள்ளது என்ற உண்மையான விடயமாகும்.
ஆனால் அந்தப் பலம் நாம் பிரிந்திருப்பதிலா அல்லது இணைந்திருப்பதிலா தங்கியுள்ளது? எம்மிடமுள்ள பிரதான பலமான மனித வளம் எமது ஒற்றுமையில் மாத்திரமே தங்கியுள்ளது.
நாம் பிரிந்தால் எமது பலம் பலவீனமடையும். நாம் பிரிந்தால் எமது பலம் பலவீனமடையும். நாம் மற்றவர் மீது குரோதம் மற்றும் சந்தேகம் மற்றும் மோதல் ஏற்பட்டால் எமது பிரதான பலம் பலவீனமடையும். இலங்கையென்பது பல்வேறு மதத்தவர்கள் வாழும் நாடு. தமக்கே தனித்துவமான கலாசாரங்களை கொண்ட மக்கள் உள்ளனர்.
அதே போன்று பிரதானமாக இருமொழிகளை தமது தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். நம்பிக்கைகள், கலாசாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடு உள்ளன. நாம் எங்கு நோக்கிச் செல்ல வேண்டும்? இந்த மாற்றங்களை மோதலுக்காக பயன்படுத்தலாம்.
இந்த மாற்றங்களை மற்றவர்களுக்கு எதிரான ஆயுதமாக உயர்த்திப் பிடிக்க முடியும். ஆனால் அவை எமது பலத்தை பலவீனப்படுத்திவிடும். எமது அபிலாசை எது.
இந்த வேறுபாடுகளை மதித்து ஒவ்வொரு இனக்குழுக்களின் தனித்துவத்தை அங்கீகரித்து அதேவேளை இலங்கையராக சிந்திக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக யுகம் எமக்கு அவசியம்.
எமது அகராதியில் இருக்கும் மிகவும் அசிங்கமான இரு வசனங்கள் எவை? இனவாதம் மற்றும் மதவாதம் தான் அவை. அதனால் இனவாதம் மற்றும் மதவாதத்தினால் எம்வசமுள்ள பலங்களை நாம் சுயமாக அழிப்பதும் பலவீனப்படுத்துவதும் தான் நடக்கிறது என நம்புகிறோம்.
அதனால் எமது நாட்டில் எந்த வித பிரிவினைக்கு, இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான பிரதான பலத்தை கட்டியெழுப்புவோம் என்பதை எமது நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறோம்.
அடுத்த பிரதான விடயம் என்ன? எமக்கு பலமான மனித வளத்தை கட்டியெழுப்புவதைப் போன்றே மனித வளத்தின் ஒற்றுமையை கட்டியெழுப்பிய பின்னர் அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சியை சமமாகவும் நியாயமாகவும் நிலைநாட்ட வேண்டும். நாம் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். நவீன இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
அனைவரும் சட்டமெனும் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும். எமது நாட்டு பிரஜைகள் மத்தியில் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு அச்சமடைய மாட்டார். அனைத்து நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்ப்பதாக நாம் அறிவோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஓரங்கட்டுகின்றனர்.
வீழ்த்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதற்கு அஞ்சுகின்றனர் என்பதை நாம் அறிவோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பான இலங்கையை கட்டியெழுப்புகையில் ' இலங்கையை கட்டியெழுப்புவோம் ' என்ற தொனிப்பொருளுக்கு சட்டத்தின் ஆட்சியை முறையாக உறுதிப்படுத்துவதிலே உயிரோட்டம் ஏற்படுகிறது.
அதேபோன்று எமது நாட்டை கட்டியெழுப்புகையில் எமக்காக மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கு உகந்த தேசத்தை உருவாக்க வேண்டும். அண்மைக் காலத்தில் முகங்கொடுத்த டித்வா புயலை பாருங்கள். பல நூறு மண்சரிவுகள் பதியப்பட்டன.
மலைகள் சரிந்தன. ஆற்றங்கரைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. எமது நாட்டின் மத்திய மலைநாட்டில் இந்த நிலை முக்கியமாக இடம்பெற்றன. மத்திய மலைநாட்டில் இருந்து ஊற்றெருக்கும் ஆறுகள் தான் இந்த தாய்நாட்டுக்கு உயிரோட்டத்தை கொண்டுவருகிறது.
மத்திய மலைநாட்டில் பொழியும் கடும் மழைதான் தாய்நாட்டுக்கு சுவீட்சத்தை கொண்டு வருகிறது. ஆனால் மத்திய மலைநாட்டுக்கு ஏற்பட்ட அழிவின் பாரதூரத்தை எமது வாழ்நாளில் அனுபவித்தோம். எம்மை கட்டியெழுப்வுதற்கான பாதை எந்தத் திசையாக இருக்க வேண்டும்.
அனைத்து இயற்கை வளங்கள், அனைத்து சுற்றுச் சூழல் கட்டமைப்புகள், உயிரினங்களை முழுமையாக அழித்தும் அச்சுறுத்தியும் கட்டியெழுப்பப்படும் நாட்டினால் என்ன பயன்? சுற்றுச் சூழலை முறையாக பலப்படுத்துகின்ற நாம் பிறக்கும் போது இருந்த மரம்மட்டைகள், விலங்குகள், இயற்கை சூழலை அதே போன்றோ அதனை விட அதிகமாகவோ பாதுகாப்பதே 'இலங்கையை கட்டியெழுப்புவோம் ' யின் பிரதான பணி என நாம் கருதுகிறோம்.
அதனால் சுற்றுச்சூழலை முழுமையாக நாசப்படுத்தும் அபிவிருத்திச் திசையை நாம் எதிர்பார்க்கவில்லை. அதன் பயங்கரமான பிரதிபலன்களுக்கு அண்மைக்காலத்தில் முகங்கொடுத்த தேசம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் அதிகளவில் சிந்திக்க வேண்டும்.
அடுத்து விசேடமாக நாம் நாட்டை கட்டியெழுப்புகையில் எமக்கு மிகவும் பலமான சர்வதேச ஒத்துழைப்புகள் அசியம் என நம்புகிறோம்.
உலக சந்தை தொடர்பான போட்டியில் பிளவு காணப்படுகிறது. உலகம் ஒவ்வொரு நாடுகளின் பலம் தமது கோணங்களை ஆதிக்கமாக திணிப்பது தொடர்பான மோதல் காணப்படுகிறது. தொடர்ச்சியாக மோதல்களை உருவாக்கும் உலமாக இருக்கிறது.
நாம் எந்தப் பக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்? நாம் எமது தாய்நாட்டிற்கு வெற்றிகளை கொண்டு வரும் எமது தாய்நாட்டின் பாதுகாப்பை அதிகமாக உறுதிப்படுத்துகின்ற நாட்டு மக்களின் வாழ்வை உயரத்திற்கு கொண்டு செல்கின்ற புதிய கோணத்திலான உறவுகளை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.
எமது நாட்டை மீண்டும் சர்வதேசத்தில் மிகவும் உயர்ந்த மற்றும் கௌரவமான தேசமாக மாற்றுவதே நாம் செல்லும் இந்தப் பாதையில் மிகவும் முக்கிய காரணியாகும். இந்தத் தூண்களின் மீது தான் எமது நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
சட்டம் இல்லாத, ஒற்றுமையில்லாத, சிறந்த சர்வதேச உறவுகள் இல்லாத, சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்ட , பாதகமான சமூகம் உள்ள இடத்தில் 'கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்க முடியாது. எனவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவசியமான தூண்களையும் அடித்தளங்களையும் உருவாக்கும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
அந்தத் தூண்களின் மீது பலமான, அசையாத பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.எமக்கு ஓரளவு மகிழ்ச்சியம் பெருமையும் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு பொருளாதார குறிகாட்டிகளில் பொருளாதாரத்தின் சாதக பாதங்களை மதிப்பிடும் பொருளாதாரத்தின் ஸ்தீரத்தன்மையை மதிப்பிடும் பெரும்பாலான முக்கிய குறிகாட்டிகள் அண்மைக்காலத்தில் அதிக முன்னேற்றத்துடனான பொருளாதார மட்டங்களாக உருவாகியுள்ளன.
1977 இன் பின்னர் மிகக் குறைந்த துண்டுவிழும் தொகை 2025 இல் பதிவானது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வரலாற்றிலேயே இலங்கை வரலாற்றில் நடைமுறைக்கணக்கில் பதிவான அதிகூடிய உபரி 2025 ஆகும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றிலேயே அதிகூடிய வருமானத்தை ஈட்டிய ஆண்டு 2025 ஆகும்.
வங்கி வட்டி விகிதங்களை நீண்டகாலமாக ஒற்றை இலக்கத்தில் பேணி வருகின்ற வருடம் 2025 ஆகும். பொருளாதாரக் காரணிகளில் மிக வெற்றிகரமானதொரு ஸ்திரத்தன்மை தற்போது காணப்படுகின்றது.
ஆயினும், ஒரு பொருளாதாரம் என்பது சாதகமான தரவுகளில் மட்டும் தங்கியிருப்பதில்லை. அது முக்கியமானது தான். ஆனால் அதில் முக்கிய செயற்பாடு என்னவாக இருக்கும்? நாம் பொருளாதார ரீதியாக நாம் அடையும் வெற்றிகள் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும்.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயராதவரை, மக்களின் வாழ்க்கை சுலபமாக்கப்படாத வரை அல்லது மக்களுக்கு மன நிம்மதியுடன் கூடிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க பொருளாதாரக் காரணிகளால் முடியாவிட்டால், அது வெறும் புள்ளிவிவரத் தரவுகளில் மட்டும் நீச்சலடிக்கும் ஒரு பொருளாதாரமாகவே அமையும்.
எனவே, பொருளாதாரத்தின் உச்ச மட்டத்தில் நாம் ஈட்டும் ஆற்றல்களையும் வெற்றிகளையும் கிராமத்திலுள்ள கடைசி பிரஜையின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதே பொருளாதாரத்தின் பிரதானமான மற்றும் வெற்றிகரமான திருப்புமுனையாகும். அந்த வகையில், மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கையின் நோக்கம் , பொருளாதாரத்தின் நன்மைகள் சமூகத்தின் அடிமட்ட மக்கள் வரை சென்றடையும் ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதாகும்.
அதனை செய்ய வேண்டும். அதேபோன்று, சுதந்திரம் என்பது முழுமையான சுதந்திரமாக மாறுவது நாம் பொருளாதார ரீதியாக எந்தளவு பலமாக இருக்கிறோம் என்கின்ற காரணியிலேயே தங்கியுள்ளது.
பொருளாதாரப் பங்களிப்பானது இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒருபுறம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், மறுபுறம் நமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தின் பலத்தை உறுதிப்படுத்துவதற்கும் அது அவசியமாகின்றது.
அப்படியாயின் நாம் என்ன செய்ய வேண்டும். அதற்கேற்ற புதிய பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்காக ஏற்கெனவே எமது கைத்தொழிற்துறையினர்கள், தொழில்முயற்சியாளர்கள், அரச சேவை ,விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுடன் நாம் பரந்தளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது எமது பிரதான வளமான மனித வளத்தின் தோள்களில் சுமத்தப்பட வேண்டிய ஒரு பணியாகும். அதற்கான கலந்துரையாடல்களையும் வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.
எமது பழமையான வரலாற்று மரபுகள், எமது அனுபவங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து இந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். எனவே இந்த 78 ஆவது சுதந்திர தினத்தில் நாம் எமது இதயத்திலும் அறிவிலும் நிலைநிறுத்த வேண்டியது நாட்டைப் பற்றிய உறுதியான அர்ப்பணிப்பாகும். எனவே ஜனாதிபதி என்ற ரீதியில் நானும், எமது அமைச்சரவை, பாராளுமன்றித்தில் எதிர்க்கட்சித் தலைவர், அரச துறை, மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் என நாம் அனைவரும் இந்நாட்டை அனைத்துத் துறைகளிலும் கட்டியெழுப்புவோம் என்ற உறுதியான தீர்மானத்தை எடுப்போம்.
உங்களுக்கு வேகமாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல்லுங்கள். ஆனால் வெகுதூரம் செல்ல வேண்டுமெனில் ஒன்றாகச் செல்லுங்கள் என்று ஆபிரிக்கப் பழமொழி ஒன்று சொல்கிறது.
எமக்கு என்ன தேவை? எமக்கு நாம் ஒவ்வொரு துறையிலும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் வெகுதூரம் செல்ல வேண்டும்.
சட்டத்தின் ஆட்சியை மேலும் உறுதிப்படுத்த வேண்டும்.எமது சுற்றுச் சூழலை மேலும் பாதுகாக்க வேண்டும். அப்படியாயின் அந்தப் பயணம் தனியாகச் செல்ல வேண்டிய ஒன்றல்ல.
தனியாக வேகமாகச் செல்ல முடியுமான போதிலும் சிறிய தூரமே செல்லலாம். எமக்குத் தேவைப்படுவது வெகுதூரம் செல்வதாகும். அந்த நீண்ட தூரத்தை எட்டுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாகச் பயணிப்போம் என அழைப்பு விடுத்து விடைபெறுகின்றேன்'' என்றும் தெரிவித்தார்.

