Feb 4, 2026 - 09:55 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவ்னி மோரி புனித தாதுக்களை இலங்கையில் வழிபாட்டிற்காகக் கொண்டுவருவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் ஹுனுபிட்டி கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போதே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பெறுபேறாக, இந்தியப் பிரதமரின் தலையீடு மற்றும் இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவ்னி மோரி புனித தாதுக்கள் இன்று (04) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புனித தாதுக்கள் வழிபாட்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், தாதுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மலர் தூவி ஆரம்பித்து வைத்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில், 60-களில் பௌத்த மடாலய வளாகத்திலுள்ள தூபி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டன.
இன்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனித தாதுக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு விசேட பீடத்தில் வைக்கப்பட்டு மத வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர், விசேட வாகனப் பேரணி மூலம் ஹுனுபிட்டி கங்காராம விகாரைக்குக் கொண்டு வரப்பட்டது.
பின்னர், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் விகாரையில் உள்ள விசேட பீடத்தில் வைக்கப்பட்ட புனித தாதுக்களைப் பொதுமக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கும் வகையில் ஜனாதிபதியினால் முதலாம் மலர் பூஜை நடத்தப்பட்டது.
இதன்படி, நாளை (05) காலை முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு 24 மணித்தியாலங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் இந்தப் புனித தாதுக்களைத் தரிசிக்க இலங்கை மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்திய - இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் இந்த விசேட நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்ரத்திற்கு ஜனாதிபதியினால் விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

