Header Logo

வடக்கு
மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை!

Feb 10, 2026 - 10:19 AM -

0

மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை!

தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

அத்தோடு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசியமக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் நேற்று (09) இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தற்போதுதான் இந்த கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் விளக்கம் தருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த திட்டத்தால் பாதிக்கப்படப்போகின்ற மக்களை ஒருபோதும் மகாவலி அதிகாரசபை அழைத்து கலந்துரையாடவில்லை. 

கடந்த 23.01.2026 அன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்துமாறு கோரியிருந்தோம். 

அதனைத் தொடர்ந்து எம்மால் இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக கடந்த 02.02.2026அன்று பாரிய எதிர்ப்பு ஆரப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இத்தகைய எமது கோரிக்கைகள் மற்றும் ஆரப்பாட்டத்தின் மூலம் எழுந்த அழுத்தங்கள் காரணமாகவே இவ்வாறு இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை இந்த திட்டத்திற்காக அபகரிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விபரங்கள் இதிலே மகாவலி அதிகாரசபையால் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. 

குறிப்பாக கூழாங்குளம் வயல்காணிகள் 88ஏக்கர், வெடிவைத்தகல்லு 87 ஏக்கர், வெடிவைத்த கல்லு கிராமம் 124 ஏக்கர், ஈச்சங்குளம் வயல் 95ஏக்கர், கோவில் புளியங்குளம் 158ஏக்கர், காட்டுப்பூவரசங்குளம் 258ஏக்கர், காஞ்சூரமோட்டைக்கிராமம் 100 ஏக்கர் உள்ளடங்கலாக மொத்தம் 910 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா திட்டம் தொடர்பான அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த விடயங்கள் தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப்படவில்லை. 

மகாவலி அதிகாரசபை என்றால், மரணத்தை ஏற்படுத்துகின்ற வலி என்றே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது. மகாவலி அதிகாரசபையினை தமிழ்மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். 

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவிலையோ, வவுனியாவிலையோ ஒருதமிழ் மக்களுக்கும் மகாவலி அதிகாரசபை காணிகளை வழங்கவில்லை. தமிழ் மக்களின் பூர்வீககாணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிகின்ற வேலைகளையே மகாவலி அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது. 

எனவேதான் மாகவலி அதிகாரசபையை மரணத்தைத் தருகின்ற வலி எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். 

குறிப்பாக கடந்த 1984, 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினத்தவர்கள் வலிந்து குடியேற்றப்பட்டனர். 

மேலும் தற்போதைய ஆட்சியாளர்கள் இவ்விதமான திட்டங்களைச் செயற்படுத்த முயற்சிக்கும்போது பாதிக்கப்படுகின்ற மக்கள் அனைவரையும் அழைத்துத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பான்மையின கமக்கார அமைப்புக்களைச் சாரந்தவர்களுக்கு கருத்துக்கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. 

எனினும் இத்திட்டத்தால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்ற, இத்திட்டத்தினால் தமது நிலங்களை இழக்கின்ற தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே பாதிக்கப்படுகின்ற எமது அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்தக் கலந்துரையாடலில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக கூழாங்குளம் கமக்கார அமைப்பு, வெடிவைத்தகல்லு கமக்கார அமைப்பு, ஈச்சங்குளம் கமக்கார அமைப்பு, கோவில் புளியங்குளம் கமக்கார் அமைப்பு என்பன இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

இவ்வாறாக மகாவலி அதிகாரசபை இத்திட்டத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள எமது தமிழ் மக்களைப் புறக்கணித்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடுசெய்துள்ளது. இவ்வாறே ஒவ்வொரு விடயங்களிலும் மகாவலி அதிகாரசபை எமது தமிழ் மக்களைப் புறக்கணிப்புச் செய்துவருகின்றது. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இந்தக் கலந்துரையாடலில் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே மணலாற்றில் வலிந்து குடியேற்றப்பட்ட 4,372 பெரும்பான்மையினக் குடும்பங்களையும், குடியேற்றப்படவுள்ள 1,626 பெரும்பான்மையினக் குடும்பங்களையும் இத்திட்டத்தில் உள்வாங்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்கின்றது. 

என்னால் முன்வைக்கப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்களை மகாவலி அதிகாரசபை ஒருபோதும் மறுத்துப்பேச முடியாது. 

இத்திட்டத்தை செயற்படுவதானால் வானிலை ஆய்வாளர்களுடைய மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதா? 

இந்த இடங்கள் பருவப்பெயர்ச்சி மழையுடன் தொடர்புடைய இடங்களாகும். எனவே இத்திட்டத்திற்காக பாரிய அளவில் காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி குறைவடையுமென சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அண்மையில் முல்வைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் ஒரு நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது. 

இவ்வாறான பாரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதன்மூலம் புவித்தட்டில் ஏற்படுகின்ற பாரத்தினாலேயே நிலதிர்வுகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அத்தோடு இத்தகைய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளபோது நில அதிர்வுகள் காரணமாக அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்தால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. 

எனவே இந்த பாரிய நீர்த்தேக்கத்தால் அத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்னசெய்வது. அத்தகைய பாதிப்புநிலைகள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதா? 

எவ்வித முறையான அறிக்கைகளுமின்றி இங்குவருகைதந்து இங்கு எமது மக்களின் பூர்வீக காணிகளையும், அடர்வனங்களையும் ஆக்கிரமித்து தமிழ்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையிலான மற்றும் முறையற்ற திட்டங்களையும் மகாவலி அதிகாரசபை மேற்கொள்ள முனைகின்றது. 

நாம் சிங்களமக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ எந்த இனமக்களுக்கும் எதிரானவர்கள் கிடையாது. பெரும்பான்மையின இனவதாதிகளுக்கே எதிரானவர்கள். 

இவ்விதமான பாதிப்புக்களை தோற்றுவிக்கின்ற வகையிலான முறையற்ற திட்டங்களை மகாவலி அதிகாரசபை இங்கு ஏற்படுத்த முனைவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

மேலும் எமது தமிழர் தாயகப்பரப்புக்களில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற திணைக்களங்களே தமிழ் மக்களின் காணிகளை அதிகளவில் அபகரிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்ற வகையில் செயற்படுகின்றன. இந்த திணைக்களங்களே இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைவார்கள். எனவே இந்த திணைக்களங்களின் அத்துமீறிய அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு கடிவாளமிடுமாறு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title