Feb 11, 2026 - 01:28 PM -
0
இலங்கையின் முன்னணி சுயாதீன மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் நிறுவனங்களில் ஒன்றான Mark and Comm (Pvt) Ltd, அண்மையில் தனது 15 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. மூலோபாய தொடர்பாடல்கள் (Strategic communications) ஊடாக உண்மையான வணிகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, ஒன்றரை தசாப்த காலப்பகுதியை இந்நிறுவனம் இதன் மூலம் பூர்த்தி செய்துள்ளது.
தன்சில் தாஜீதீனினால் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், தொடர்பாடல் பணிகளானது வெறும் ஊடக அறிக்கையிடல்களுடன் நின்றுவிடாமல், அளவிடக்கூடிய வணிகப் பெறுபேறுகளை பெற்றுத் தருவதாக அமைய வேண்டும் எனும் முக்கிய கொள்கையின் அடிப்படையில் தனது நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. இத்தகைய அணுகுமுறையின் ஊடாக தொழில்நுட்பம், விருந்தோம்பல், உற்பத்தி, விவசாயம், நிதிச் சேவைகள், சில்லறை வணிகம், கல்வி மற்றும் நிலைபேண்தன்மை ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் Mark and Comm நீண்டகாலப் பங்காண்மைகளை கட்டியெழுப்பியுள்ளது. Mark and Comm முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “பதினைந்து வருடங்களுக்கு முன்னர், சிறந்த தொடர்பாடல் பணிகள் என்பது, வணிக ரீதியிலான சிக்கல்களை முதலில் ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலமே கட்டியெழுப்பப்படுகின்றது என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் எமது பயணத்தை ஆரம்பித்தோம். நாம் ஒருபோதும் வெறும் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்களாக எம்மை அடையாளப்படுத்தியதில்லை. மாறாக, தலைமைத்துவக் குழுக்களுடன் இணைந்து ஒரு மூலோபாய ஆலோசனைக் கட்டமைப்பாகச் செயற்படுகிறோம். இதன் மூலம் நற்பெயர் சார்ந்த சவால்கள், பங்குதாரர்களுக்கு இடையிலான சிக்கல்கள் மற்றும் சந்தை நிலைப்படுத்தல் போன்ற விடயங்களை தெளிவான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையுடன் கையாளுவதற்கு நாம் அவர்களுக்கு உதவுகின்றோம்.” என்றார்.
நிறுவனத்தின் இத்தகைய அணுகுமுறைக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதற்கமைய, Campaign Asia-Pacific இனால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த தெற்காசிய பிராந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் எனும் விருதை 2025 ஆம் ஆண்டில் Mark and Comm வென்றெடுத்தது. வாடிக்கையாளர்களுக்காக அது முன்னெடுத்த பணிகளின் தரம் மற்றும் இப்பிராந்தியத்தில் தொழில்சார் தரநிலைகளை மேம்படுத்துவதில் வழங்கிய பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
GlobalCom PR Network இன் ஒரு அங்கத்தவர் மற்றும் PRCA Asia Pacific இன் கூட்டாண்மை உறுப்பினர் என்ற வகையில், Mark and Comm நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆழமான உள்ளூர் சந்தை அறிவுடன் கூடிய சர்வதேச ரீதியிலான விரிவான அணுகலை வழங்குகின்றது. அத்துடன், இலங்கையிலும் மாலைதீவிலும் Hootsuite மற்றும் Talkwalker ஆகிய நிறுவனங்களின் பிரத்தியேக பங்காளராகவும் செயற்படுகின்றது. இதன் ஊடாக, நிறுவன மட்டத்திலான சமூக ஊடக முகாமைத்துவம் மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு ஆகிய துறைகளில் முன்னணியில் திகழும் அதேவேளை, வர்த்தகநாமங்கள் தமக்கான உள்ளக ஆற்றல்களை வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றது.
இந்த நிபுணத்துவமானது அண்மையில் Brands: Listen, Learn and Lead எனும் நிகழ்வின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. இதன்போது, இவ்விரு தளங்களினதும் சர்வதேச நிறைவேற்று அதிகாரிகளை கொழும்பிற்கு அழைத்து வந்து, Mark and Comm ஒரு முன்னோடியான தொழில்துறை முன்னெடுப்பை மேற்கொண்டது. சந்தைப்படுத்தல் தலைவர்கள் (CMOs) மற்றும் துறைசார் நிபுணர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கலந்துரையாடல், நிறுவனங்களுக்குள்ளேயே சமூக ஊடக செவிமடுத்தல் (In-house social listening) ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியது. குறுகிய காலத் தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு, நீண்ட கால மூலோபாய நன்மைகளைத் தரும் கருவிகள் மூலம் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
எமது வாடிக்கையாளர்கள் இயங்குகின்ற பரந்த சூழலைப் புரிந்துகொள்வதையே எமது பணிகள் எப்போதும் அடிப்படையாகக் கொண்டுள்ளன, என Mark and Comm நிறுவனத்தின் இயக்குநர் சாமனி நாணயக்கார தெரிவித்தார். அரச கொள்கை சூழல்கள், பங்குதாரர்களின் போக்குகள் அல்லது சந்தை பற்றிய மக்களின் பார்வைகள் என எதுவாக இருந்தாலும், வினைத்திறனான தொடர்பாடலுக்கு ஆழமான செவிமடுத்தலும் கலாசார நுண்ணறிவும் அவசியமாகும். அந்த அடித்தளமே, மேலோட்டமான பொதுவான செய்திகளுக்குப் பதிலாக, உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூலோபாயங்களை உருவாக்க எமக்கு உதவுகின்றது.
Mark and Comm நிறுவனத்தின் சேவைகளானவை ஊடக உறவுகள், நற்பெயர் முகாமைத்துவம், நெருக்கடிகால தொடர்பாடல்கள், மூலோபாய ஆலோசனைகள் மற்றும் சந்தை நிலைப்படுத்தல், பங்குதாரர்களுடனான ஈடுபாடுகள், நிறைவேற்று அதிகாரிகளுக்கான சிந்தனைத் தலைமைத்துவம், நிறுவனத்தின் உள்ளக தொடர்பாடல்கள் மற்றும் ஒருங்கிணைந்த பிரசார மேம்பாடுகள் என பரந்து விரிந்து காணப்படுகின்றன. இவை அனைத்திலும் உள்ள ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால், இவை வெறும் தொடர்பாடல் பணிகளாக மாத்திரம் அமையாமல், வணிக ரீதியிலான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே அமைகின்றன.
“தொடர்பாடல் துறையில் உள்ள நிபுணர்கள், தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றார்கள் என்பதையும், அதேவேளை மூலோபாயச் சிந்தனை மற்றும் பங்குதாரர் முகாமைத்துவம் போன்ற அடிப்படை அம்சங்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பதையும் வரவிருக்கும் 15 ஆண்டுகள் சவாலுக்கு உட்படுத்தும், என தாஜுதீன் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றல்கள், திறமைகள் மற்றும் உறவுகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், அந்த எதிர்காலத்திற்காக நாம் எம்மைத் தயார்படுத்தி வருகின்றோம்.” என்றார்.
வாடிக்கையாளர் பணிகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கையின் தொடர்பாடல் துறையின் தொழில்சார் தரநிலைகளை மேம்படுத்துவதில் Mark and Comm ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வருகின்றது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொடர்பு அமைப்பான PRCA Asia Pacific இன் இலங்கைப் பிரதிநிதி என்ற வகையில், உள்நாட்டுத் துறைசார் நிபுணர்களை சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்சார் மேம்பாட்டு வளங்களுடன் இணைப்பதற்கு இந்நிறுவனம் பணியாற்றியுள்ளது. அத்துடன், இலங்கையில் மக்கள் தொடர்புத் துறையின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்வதற்காக நாடு தழுவிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், சர்வதேச நிபுணர்கள் மற்றும் ஏனைய நிறுவனத் தலைவர்களை ஒன்றிணைத்து அறிவுப்பகிர்வு செயலமர்வுகள் மற்றும் இணையவழி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் அறநெறி சார்ந்த தரநிலைகளைப் பேணுவதற்காகவும் இது பகிரங்கமாக முன்னின்று செயற்படுகின்றது.

