செய்திகள்
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Feb 13, 2026 - 08:56 AM -

0

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி நுவரெலியாவில் பிறந்த உபாலி திஸ்ஸ விதாரண, மருத்துவத் துறையினூடாகவே தனது வாழ்வின் முதற்படியை ஆரம்பித்தார். 

என். பி. மெகி பெரேரா மற்றும் பீரிஸ் விதாரண ஆகியோரின் புதல்வராவார். 

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியனவற்றில் கல்வி பயின்ற திஸ்ஸ விதாரண, ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார். 

அவர் இவ்விரு பாடசாலைகளினதும் கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். 

1965 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். 

1971 இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பான தனது Ph.D.பட்டத்தைப் பூர்த்தி செய்தார். 

1959–1967 காலப்பகுதியில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியதுடன், 1963/64 ஆண்டுகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாளராகவும் கடமையாற்றினார். 

இதேவேளை 1974 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், காலப்போக்கில் அக்கட்சியின் தலைவரானார். 

2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் முதன்முறையாக தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 

2004 முதல் 2015 வரை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், விஞ்ஞான விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்தார். 

இலங்கையின் ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் இளம் விஞ்ஞானிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அவர் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். 

மருத்துவ மற்றும் விஞ்ஞானத் துறைக்கு அவர் ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் வகையில், 2017 ஆம் ஆண்டு அவருக்கு வித்யா ஜோதி விருது வழங்கப்பட்டது. 

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், 2019 டிசம்பர் 4 ஆம் திகதி வடமத்திய மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்று மக்கள் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05