Feb 13, 2026 - 10:17 AM -
0
நாடெங்கிலும் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் இலங்கையின் முன்னணி தொழில்துறை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Tantri Trailers (Pvt) Ltd, புத்தளத்தில் உள்ள Mercy Education Campus உடன் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 பெப்ரவரி 12 அன்று BMICH ஓர்க்கிட் மண்டபத்தில் சிரேஷ்ட அரசாங்க பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வித் துறை பங்குதாரர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகள் எதிர்கொள்ளும் அதிகரித்துச் செல்லும் திறன் இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கட்டமைக்கப்பட்ட, கைத்தொழிலை முன்னிலைப்படுத்திய தொழில்நுட்ப பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும். தொழிற்கல்வியை உண்மையான உலக தொழில்துறை தேவைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தொழில்நுட்பம் தொடர்பில் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் அதே வேளையில், திறன்கள் கொண்ட தொழில்நுட்ப பணியாளர்களின் தலைமுறையை உருவாக்க இந்த முயற்சி முயல்கிறது.
Tantri Trailers (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அத்துல ஹப்புதந்திரி அவர்கள் இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “திறன்கொண்ட, வேலைக்குத் தயாராக இருக்கும் தொழில்நுட்பப் பணியாளர்களை எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும் என்பதில் இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சி தங்கியுள்ளது. Mercy Education Campus உடனான இந்தக் கூட்டாண்மை மூலம், தேசிய உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் அதே வேளையில், வேலைவாய்ப்புத் திறனை நேரடியாக மேம்படுத்தும் நடைமுறைக்கு ஏற்ற, தொழில்துறை தொடர்பான பயிற்சியில் நாங்கள் முதலீடு செய்கிறோம். இலங்கையில் இளைஞர்கள் கண்ணியத்துடன் சம்பாதிக்க உதவுவதும், உள்ளூர் கைத்தொழில்கள் வளரத் தேவையான திறமைசாலிகளைப் பெற்றுக்கொள்ள அவற்றுக்கு உதவுவதுமே எங்கள் குறிக்கோள்.” இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை, பணியாளர் தயார்நிலை மற்றும் தொழில்துறை உற்பத்தித்திறன் தொடர்பான அழுத்தமான சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் ஒரு காலகட்டத்தில், நீண்டகால தேசிய திறன் மேம்பாட்டிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது. இந்த திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்ற, நேரடி பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன், மாணவர்கள் தற்போதைய மற்றும் எதிர்கால தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலைக்குத் தயாராக இருக்கும் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன், குறிப்பாக SDG 4 (தரமான கல்வி), SDG 8 (கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி), SDG 9 (கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு) மற்றும் SDG 17 (இலக்குகளுக்கான கூட்டாண்மைகள்) ஆகியவற்றுடன் மிக நெருக்கமாக ஒன்றியுள்ளது. இந்தக் கூட்டாண்மை மூலம், தரமான தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்துதல், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் அர்த்தமுள்ள தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பு மூலம் இலங்கையில் நிலைபேண்தகு தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றை Tantri Trailers மற்றும் Mercy Education Campus ஆகியன தமது நோக்கமாகக் கொண்டுள்ளன.
இலங்கையின் உற்பத்தித் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், தேசிய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை செயற்திட்டங்களில் Tantri Trailers முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், நம்பகமான தொழில்துறை தீர்வுகள் வழங்குநராக அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான Mercy Education Campus, தொழில் பயிற்சியில் நீண்ட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், இக்கூட்டாண்மையை நாட்டில் இத்தகைய மிகவும் விரிவான கைத்தொழில் கல்வி சார்ந்த ஒத்துழைப்புகளில் ஒன்றாக மாற்றுகிறது.

