Mar 16, 2026 - 01:56 PM -
0
ஒருங்கிணைந்த புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையை வெளியிடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஏபா பஞ்சாங்க ஆசிரியர் இந்திக ஏபா செனவிரத்ன, திரசர பஞ்சாங்க ஆசிரியர் சமத் கொத்தலாவல மற்றும் மாற்று சுபநேரக் குழுவின் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, நாளை (17) குறித்த சுபநேரப் பத்திரிகை அச்சிடப்பட்டு, அரச சுபநேரப் பத்திரிகையாக மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கலாசார விவகாரத் திணைக்களம் 2024ஆம் ஆண்டில் அரச சுபநேரக் குழுவை கலைத்திருந்ததுடன், இதுவரையில் அரசாங்கம் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை.
இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழு உறுப்பினர்களாலேயே வெளியிடப்பட்டதாகவும், அரசாங்கம் உடனடியாக அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்தச் சூழலில், சர்வஜன அதிகாரம் கடந்த சனிக்கிழமை உறுதியளித்தபடி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுபநேரப் பத்திரிகையைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுத்திருந்தது.
17 ஜோதிட அறிஞர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
