Mar 16, 2026 - 02:30 PM -
0
எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR நடைமுறை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குத் தகுந்த வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது அவை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதாகவும், அங்கிருந்து அத்தகு வாகனங்களை கொழும்புக்கு கொண்டு வருவதில் எரிபொருள் தட்டுப்பாடு பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாதாந்தம் சுமார் 100 முதல் 150 வரையிலான வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக விசேட QR நடைமுறை அல்லது எரிபொருள் ஒதுக்கீடு (Quota) ஒன்றை உருவாக்குவது அவசியமானது எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“எமது வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கே வருகின்றன. அங்கிருந்து கொண்டு வரும்போது வாகனங்களில் எரிபொருள் இருப்பதில்லை. பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கு QR நடைமுறையின் கீழ் எவ்வாறு எரிபொருளைப் பெறுவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சில நேரங்களில் காட்சியறைகளில் (Showrooms) இருக்கும் வாகனங்களில் எரிபொருள் தீர்ந்துபோனால், அவற்றுக்கு எவ்வாறு எரிபொருளைப் பெறுவது? எனவே, பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ஒரு QR முறையை அல்லது எமது நிறுவன இலக்கத்திற்கு (CC Number) ஒரு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். ஒரு இறக்குமதியாளர் சராசரியாக 100-150 வாகனங்களைக் கொண்டு வருகிறார். இவை அனைத்திற்கும் எமது தனிப்பட்ட QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முடியாது. இந்தத் துறையானது அரசாங்கத்திற்கு அதிக வரி வருமானத்தைப் பெற்றுத்தரும் ஒரு வணிகமாகும். எனவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி, கலந்துரையாடி ஒரு முறையான தீர்வை எட்ட வேண்டும்” என்றார்.
