Mar 17, 2026 - 10:19 PM -
0
யுத்தச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், விமான சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (17) நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு அவர்களின் தலைமையில், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தற்போதுள்ள விமான எரிபொருள் கையிருப்பு மற்றும் அதனை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், விமான சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போதைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியில், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை என்ற ரீதியில் எரிபொருள் பயன்பாட்டைச் சரியாக முகாமைத்துவம் செய்து, சேவைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு எடுக்க வேண்டிய செயன்முறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
