Mar 18, 2026 - 10:19 AM -
0
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன.
அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
"எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது.
அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது.
அடுத்ததாக ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் எரிவாயு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் அடுத்த கப்பலை அவர்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம். எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு," என அவர் தெரிவித்தார்.
