Mar 18, 2026 - 06:06 PM -
0
நாட்டின் தெற்கு கடற்பரப்பில் பலநாள் மீன்பிடி படகு ஒன்றில் 654 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களும் இன்று (18) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களில் ஐவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய ஐவரையும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 654 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இந்தச் சந்தேக நபர்கள் ஆழ் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த போதைப்பொருள் தொகையுடன் கூடிய மீன்பிடி படகு கடந்த 12 ஆம் திகதி காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, படகிலிருந்து போதைப்பொருள் அடங்கிய 48 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்டவற்றுள் 478 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் எனவும், ஏனைய 176 கிலோ கிராம் ஹெரோயின் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த போதைப்பொருள் தொகையின் மொத்தப் பெறுமதி 10 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொகைக்கு மேலதிகமாக, 8 கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான மெகசின்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு எம்-16 ரக துப்பாக்கி என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
இது நடுக்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஆயுதத் தொகை எனத் தெரிவிக்கப்படுகிறது.
