Mar 19, 2026 - 02:48 PM -
0
கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் இன்று (19) கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் ஏனைய விவசாய அமைப்புகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவிக்கும் விவசாயிகள், இதனை முறையாக விசாரிக்குமாறு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் வலியுறுத்தத் தீர்மானித்துள்ளனர்.
கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் இருந்து ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றது.
அங்கு 28 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தின் இறுதியில், மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் விவசாயிகள் கையளித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது, விவசாய அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்படும் இருவரின் உருவ பொம்மைகளும் விவசாயிகளால் எரிக்கப்பட்டன.
--
