Mar 19, 2026 - 04:14 PM -
0
பாராளுமன்ற ஆலோசனைக் குழுவினால் சட்டவிரோதமான முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அதனைச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்பது குறித்து இம்மாதம் 27ஆம் திகதி அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜாயா ஸ்ரீ நம்முனி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மனுதாரரின் பணிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சுமூகமாகத் தீர்ப்பதற்காக இரண்டாவது பிரதிவாதியினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த யோசனைகளின் அடிப்படையில் இந்த மனுவைச் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனுதாரர் தரப்பு பரிசீலிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, குறித்த சமரசத் தீர்வு யோசனைகளை ஆராய்ந்து, தனது கட்சிக்காரரிடம் ஆலோசனை பெற்று காரணிகளை தெரிவிப்பதற்கு ஒரு திகதியை வழங்குமாறு கோரினார்.
இதற்கமைய, இந்த மனுவை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி அழைக்க உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.
அதன்படி, குறித்த ஆட்சேபனைகளை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகள் தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்ற பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
