Mar 19, 2026 - 04:47 PM -
0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இன்று (19) 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்ட பிரதிநிதித்துவத்தை மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார்.
மாணவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கி, இன்று விசாரணையின் போது மாணவர்களுக்கான சட்ட பிரதிநிதித்துவத்தையும் வழங்கினேன்.
பொலிஸார் இன்று மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு பெற்ற வாக்கு மூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி, அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களோடு தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13 ஆம் திகதி திகதியிடப்பட்டு, 16 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17 ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து , அந்நேரத்தில் விசாரணைக்கு வருமாறு பதிவாளருக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த 10 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்று மூன்று மாணவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மூன்று மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்றலில் இன்று போராட்டம் நடாத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
--
