Mar 19, 2026 - 06:18 PM -
0
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை தவறி கீழே வீழ்ந்துள்ளார்.
அவர் ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் முகாமையாளர் மஞ்சுளா மொனரதென்ன தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி செல்பி' எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி அவரை கண்டுபிடித்துள்ளார்.
அதனை பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்துவிட்டு, அவரை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடினார்.
அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் முகாமையாளர் மஞ்சுளா மொனரதென்ன தெரிவித்தார்.
--
