Apr 3, 2026 - 11:13 PM -
0
வறட்சியான வானிலையுடன் கொட்டாவை - ருக்மல்கம வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில நாட்களாக நீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தச் சூழலில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட சில நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு அந்தந்த வீடுகளுக்கு நீர் வழங்கப்பட்ட போதிலும், சில தாங்கிகளுக்கு இதுவரை நீர் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்த கேள்வி காரணமாக சில தாங்கிகளில் நிரப்பப்படும் நீர், அரை மணித்தியாலத்திற்குள்ளேயே தீர்ந்து விடுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊடகப் பேச்சாளர் ஒருவரிடம் வினவியபோது, தற்காலிக தீர்வாக ருக்மல்கம வீட்டுத்திட்டத்தில் நீர் தாங்கிகளை நிறுவி, பவுசர்கள் மூலம் அவற்றுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் இந்த நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1980ஆம் ஆண்டு ருக்மல்கம வீட்டுத்திட்டத்திற்கு நீர் வழங்குவதற்காக பெரிய நீர் தொட்டி ஒன்று நிறுவப்பட்டிருந்த போதிலும், பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளால் அதன் பராமரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே நீண்ட காலமாகத் தாம் இவ்வாறான நீர் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
