Apr 4, 2026 - 10:18 AM -
0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (04) காலை முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக்குத் தங்களது ஆதரவு இல்லையென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் வழமை போன்று தங்களது கடமைகளை முன்னெடுப்பார்கள் எனவும், வைத்தியசாலைகளின் விசேட மருத்துவ சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கத்தின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலதிக பயிற்சி பெறும் விசேட வைத்தியர்களும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தில் சுமார் 2,300 வைத்தியர்கள் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த ஞானசேகரம், ஒரு கொள்கை ரீதியாக விசேட வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதில்லை எனவும் கூறினார்.
விசேட வைத்தியர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், நோயாளிகளின் உயிரைப் பணையம் வைத்துப் போராட்டத்தில் ஈடுபடுவது தங்களது கொள்கையல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சில பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
வைத்தியர்களின் நியமனப் பட்டியல் மற்றும் இடமாற்றப் பட்டியலில் அரசியல் தலையீடுகள் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முடிவடையும் திகதி அல்லது நேரம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் ஒரு நாள் அடையாளப் போராட்டங்களை வைத்தியர்கள் முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
