Apr 7, 2026 - 09:55 AM -
0
நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்ததாகவும், இது அனைவரும் அறிந்த ஒரு பகிரங்க ரகசியம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, "நாங்கள் சுற்றிவளைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளே தொடர்ச்சியாக ஆதரவு வழங்கினார்கள். அது ஒரு பகிரங்க ரகசியம், அது அனைவருக்கும் தெரியும். போதைப்பொருள் கடத்தலில் முதன்மையாக இருப்பது இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே. இவர்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து வருகிறோம்." என்றார்.
இதேவேளை, சிறுவயதில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுவர்கள், வன்முறையை நோக்கித் தூண்டப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
