Apr 21, 2026 - 05:54 PM -
0
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை முன்னெடுப்பதற்காக இன்று (21) காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கைக் கடற்படையினரால் குறித்த கப்பலுக்குக் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த Diving Support Vessel வகையைச் சார்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) செயற்படுகின்றார்.
இப்போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளினதும் முக்குளிப்புப் பிரிவுகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இக்கப்பலின் பணியாளர்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
