Apr 23, 2026 - 04:21 PM -
0
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி, அல்லைப்பிட்டி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரின் கட்டளையை மீறி 'ஹயஸ்' ரக வாகனத்தைச் செலுத்தினார் எனக் கூறி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், அருள் பயஸ் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
முன்னதாக இந்த வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID) விசாரிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், பணிப்பளு காரணமாக இந்த விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு மாற்றுவதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி, ஊர்காவற்துறை பொலிஸாரின் குறிப்பேடுகள், விசாரணை அறிக்கைகள் மற்றும் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளைத் தாம் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, குறித்த துப்பாக்கிகள் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதன்போது விசாரணைகளைத் துரிதப்படுத்தி, சந்தேகநபர்களை விரைவாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மன்று அறிவித்தது.
--
