Apr 29, 2026 - 11:07 AM -
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பெருத்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி, வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை நேற்று (28) காலை திறத்து வைத்தார்.
பனை அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கட்டட்டன.
இவ் நிலையத்தினால் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர்,
பல படுகொலைகள், பல குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.
எனவே, இவை எல்லாவற்றிற்கும் நீதி கிடைக்கக்கூடிய ஒரு நிலை இன்று காணப்படுகிறது. நாங்கள் மிக விரைவிலே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஒரு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே இதற்கான விசாரணைகள் சரியான முறையிலே, நீதியான முறையிலே கொண்டு செல்லப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீதியை எதிர்பார்ப்பவர்களுக்கும் மிக விரைவிலே அந்த நீதி தேவதை தன்னுடைய தீர்ப்பைச் சரியான முறையிலே வழங்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல இன்னமும் இங்கு ஆண்ட, இங்கிருந்த பல குற்றச்செயலில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அவர்கள் செய்த குற்றச்செயல்களுக்கும், ஊழல்களுக்கும், கொலைகளுக்கும் நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால், சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை எமது அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
சட்டம் என்பது பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம், இன ரீதியான சட்டம், மொழி ரீதியான சட்டம், பிரதேச ரீதியான சட்டங்கள் கிடையாது. சட்டத்தின் முன் நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் சமமானவர்கள் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதிலிருந்து, பல முதலமைச்சர்கள், பல அமைச்சர்கள், பல உயர் அதிகாரிகள் கைது வரை நாட்டிலே நீதி தேவதையினுடைய செயல்பாடுகள் சரியான முறையிலே நடைபெறுவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
அதேபோல இன்று திவாலான எதிர்க்கட்சியினர் நாட்டிலே சில சில விடயங்களை அவர்கள் பிடித்துக்கொண்டு, மீண்டும் இந்த மக்களாட்சியை, இந்த நீதியான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் கள்ளர் கூட்டம் ஆட்சிக்கு வர முடியும் என்று அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
இன்று நாட்டிலே எதிர்க்கட்சி என்பது இல்லை. எதிர்க்கட்சி என்பது மக்களுடைய பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று எதிர்க்கட்சி என்பது, நாளுக்கு நாள் நகைச்சுவையைச் சொல்லுகின்ற கட்சிகளாகத்தான் இன்று எமது நாட்டிலே எதிர்க்கட்சித் தலைவரும் இருக்கிறார், எதிர்க்கட்சிகளும் இருக்கின்றன.
எனவே, நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் கூறினோம், 'வளமான நாடு, அழகான வாழ்க்கை'. நீதியான நேர்மையான ஆட்சியை நாட்டிலே கொண்டு செல்வோம் என்று. இன்று நாட்டிலே இனவாதமற்ற, மதவாதமற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படுகின்ற ஓர் ஆட்சியை நாங்கள் இன்று கொண்டு செல்கின்றோம்.
இன்று நாட்டிலே இனங்களுக்கு இடையிலான விரிசல்கள், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், இனங்களுக்கு இடையிலான சண்டைகள் இன்று கணிசமாகக் குறைந்திருக்கிறது என தெரிவித்தார்.
--
