May 1, 2026 - 12:46 PM -
0
மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு. தெற்கு மற்றும் மலையகம் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர்.
இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாம் இரண்டு வகையான தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஒன்று மக்களுக்கானது மற்றொன்று ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்களை நீக்குவது போன்ற தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
இலங்கையின் முதன்முறையாக உழைக்கும் மக்களின் நோக்கத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக உருவாகியுள்ளது.
டித்வா புயலினால் பெருந்தோட்டத்துறை சார்ந்த விவசாய நிலங்கள், விவசாய நிலங்கள் என்பன சேதமாகின.
நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையில் அதிகளவான நிவாரணங்களை வழங்கினோம்.
அதேபோன்று உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்பதாலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தோம்.
இப்படிதான் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபித்தால் நன்மை கிடைக்கும்.
மத்திய கிழக்கு போர் சூழலில் எரிபொருள், உரம் என்பனவற்றின் விலைகள் அதிகரித்தது.
மக்களின் நன்மைக் கருதி அதில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்வந்தது.
அரசாங்கத்தின் ஸ்தீரதன்மை மக்களின் நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தற்போது சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் தனித்தனியே கூட்டங்களை கூட்டி மே தினத்தில் கதைக்கிறார்கள்.
அவர்களால் அரசாங்கத்தின் மே தின கூட்டத்தைப் போல் அரைவாசியாவது சேர்த்து காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றோம்.
நாடு முழுவதும் பல்லாயிரம் கணக்கான மக்கள் எமது கூட்டங்களில் அந்த நம்பிக்கையிலேயே இணைந்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் உருவாக்கினார்கள்.
எனவே நாட்டு மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.
ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் அதிகளவில் சிறை செல்லும் வருடமாக இது அமையும்.
இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் தமது வரப்பிரசாதங்களை அதிகரித்துக் கொள்வதற்கான தீர்மானங்களையே எடுத்திருந்தார்கள்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு மாறுபட்ட வகையில் மக்கள் நலன் சிந்தித்தே பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளது.
எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம்.
டித்வா புயலுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாவை நிவாரணமாக வழங்கினோம்.
ஆனால் அவற்றில் ஒரு சதத்தையேனும் கடன் வாங்கியோ, புதிய நாணயத்தாள்களை அச்சிட்டோ வழங்கவில்லை.
தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே தமிழ் மொழி மூலமான கல்வியற்கல்லூரிகளில் அதிகளவான தமிழ் ஆசிரியர் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகின்றோம்.
பெருந்தோட்ட வீதிகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
