May 11, 2026 - 01:49 PM -
0
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன் போது பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது. காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.
இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை நாளைமறுதினத்துக்குள் அகற்றுமாறும், இல்லையேல் பிரதேசசபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பிரதேசசபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விடயத்தில் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனையும், வலி.வடக்கு பிரதேசசபை செயலாளரையும் இன்று திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கியது. வலி. வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.
இதன்போது பொலிசார் சட்டத்தினை நடைமுறைப்படுத்த இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற போது பொலிசாரே அதற்கு எதிராக இருப்பது தையிட்டி விகாராதிபதி பௌத்த மதத்தை தழுவுவதால் பொலிசாரும் பௌத்த பீட கட்டளையை ஏற்பது போன்று சமாதான குறைவை ஏற்படுத்தும் என தொடுக்கப்பட்ட இந்த வழக்கினை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது.
எனவே இது தொடர்பான கட்டளையினை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்குக் குறுக்காகவே பவானி வீதி அமைந்துள்ளது. எனவே, அந்த வீதியை விடுவித்தால் கணிசமான காணிகள் தானாக விடுவிக்கப்படும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
