May 29, 2026 - 12:49 PM -
0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பட்டையை கிளப்பிய பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். ஜெயிலரை போன்றே அதன் இரண்டாம் பாகத்திலும் பிரபல நட்சத்திரங்கள் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் என்று அடிக்கடி சொல்லி வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்.
தலைவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் ஷாருக்கான். ஆனால் ஜெயிலர் 2 ஷூட்டிங்கிற்கு முன்பு ஷாருக்கானின் கிங் பட வேலை துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் ஜெயிலர் 2 இல் நடித்தால் தான் கிங் படத்திற்காக உருவாக்கி வைத்திருக்கும் லுக் வெளியாகிவிடும் என நினைத்தார் ஷாருக்கான்.
இதையடுத்து சாரிஜி, மாஃப் கர்தோ, கிங் பட லுக்கை ஜெயிலர் 2 லுக்காக மாற்றிவிட முடியாது. அதனால் வேறு யாரையாவது நடிக்க வைக்கவும் என்று நெல்சன் திலீப்குமாரிடம் சொல்லிவிட்டார் ஷாருக்கான். ரஜினிகாந்த் பட வாய்ப்பு போச்சே என்கிற வருத்தம் இருந்தாலும் தன் கிங் படம் முக்கியம் என்பதால் ஆறுதல் அடைந்தார்.
இந்நிலையில் பகவான் தாதா படத்தில் ரஜினிக்கு வளர்ப்பு பிள்ளையாக நடித்த ரித்திக் ரோஷனை ஏன் ஷாருக்கான் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று நினைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரித்திக் ரோஷன் நடிப்பது தொடர்பாக ஜெயிலர் 2 படக்குழு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஷாருக்கானை போன்றே ரித்திக் ரோஷனும் ரஜினியின் தீவிர ரசிகன் தான். அதனால் தனக்கு பிடித்த தலைவருக்காக ரித்திக் ரோஷன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஷாருக்கானுக்கு பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்திருந்தார் நெல்சன் திலீப்குமார். ரித்திக் ரோஷனுக்கு காக்கிச் சட்டை போட்டால் வேற லெவலில் இருக்கும்.
அவருக்கு ஏற்கனவே தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகைகள் இருக்கிறார்கள். அதனால் ரித்திக் மட்டும் ஜெயிலர் 2 படத்தில் நடித்தால் அதன் மவுசு அதிகரித்துவிடும். கவுரவத் தோற்றம் என்றால் வந்து தலையை காட்டிவிட்டுச் செல்லும் கதாபாத்திரம் இல்லை. 15 நிமிடங்கள் வரும் கதாபாத்திரம் ஆகும்.
ஜெயிலர் 2 படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இரண்டாவது முறையாக ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ணயிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து மூன்றாவது முறையாகவும் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
KHxRK என்று அழைக்கப்படும் அந்த படத்தில் ரஜினி மட்டும் அல்ல கமல் ஹாசனையும் இயக்கப் போகிறார் நெல்சன் திலீப்குமார். தன் படத்தின் ஹீரோ யாரென்று சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தலைவர், விண்வெளி நாயகனை இயக்க நெல்சன் திலீப்குமாருக்கு 70 கோடி ரூபா சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

