Jun 8, 2026 - 02:39 PM -
0
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான சலீம் குமார் (56), தீடிரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 06 ஆம் திகதி காலை கொச்சியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 06 ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் சுருக்க நோய் பாதிப்பால் அவதிப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தசூழலில் தான், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, "சலீம் குமார் அவர்கள் மலையாளத் திரைப்படத்துறையின் மாபெரும் தூணாக விளங்கியவர். மில்லியன் கணக்கான மக்களைத் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்தவர். அதே நேரத்தில் தனது அழுத்தமான குணச்சித்திர நடிப்பால் நம் எல்லோரையும் நெகிழச் செய்தவர். தேசிய விருது வென்றவரான அவரது மறைவு, இந்தியத் திரை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1969 இல் பிறந்த சலீம் குமார், தனது கலைப் பயணத்தை ஒரு மிமிக்ரி கலைஞராகத் தொடங்கினார். 1980 மற்றும் 90-களில் கேரளாவில் புகழ்பெற்றிருந்த மிமிக்ரி மேடைகள் மூலமாகத் திரையுலகிற்குள் நுழைந்தார். 1997 இல் வெளியான 'இஷ்டமானு நூறு வட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
'தென்காசிப்பட்டணம்' போன்ற திரைப்படங்கள் மூலம் மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். அவரது தனித்துவமான முகபாவனைகளும், வசன உச்சரிப்புகளும் மலையாள ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தன.
தனது திரைப்பயணத்தில் 300 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக அறியப்பட்டாலும், மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு வெளியான'ஆதாமின்றெ மகன் அபூ' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்” என்பது குறிப்பிடத்தக்கது.
