Jun 17, 2026 - 09:55 AM -
0
நடிகை கவுதமி 1990 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தான் சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார்.
2004 ஆம் ஆண்டு கவுதமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.
அதன்படி 2004 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை கவுதமி பெயரிலும் தனது மனைவி நாச்சியாள் பெயரிலும் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன், நாச்சியாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். சில நாட்கள் கழித்து இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றார்.
சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துகள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித்தனியாக நடிகை கவுமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
கவுதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி அதிகாரம் பெற்று ரூபா 60 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் இதனை சில மாதங்கள் கழித்து ரூபா 1 கோடி 63 லட்சத்துக்கு விற்றுள்ளனர். மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத் தொகையையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளின் அடிப்படையில் சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் அண்ணா நகர், வானகரம் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
