Jun 27, 2026 - 06:50 PM -
0
பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியை 20-07 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, பாடசாலைகளுக்கு இடையிலான லீக் ரக்பி போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கண்டி திரித்துவக் கல்லூரி இன்று (26) கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டித் தொடர் முழுவதும் தோல்வி எதையும் சந்திக்காமல் முதலிடத்திற்கு முன்னேறிய திரித்துவக் சிங்கங்களுக்கு, இந்த வெற்றியின் மூலம் நடப்பு லீக் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சொந்தமாக்கும் வாய்ப்பு கிட்டியது.
போட்டியின் ஆரம்பம் முதலே கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரித்துவக் கல்லூரி, முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் போது 07-00 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணியினர் 2 ட்ரைகள் , 2 கன்வெர்ஷன்கள் மற்றும் 2 பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளைப் பெற்றனர்.
இந்த லீக் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கு மேலதிகமாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி தொடரின் சாம்பியன் பட்டத்தையும் திரித்துவக் கல்லூரி வென்றுள்ளது.
அதற்கமைய, இம்முறை பாடசாலை ரக்பி மைதானத்தில் இரட்டைக் கிரீடங்களை வெல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இம்முறை போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை மருதானை சாஹிரா கல்லூரியும், மூன்றாம் இடத்தை புனித பேதுரு கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

