Header Logo

செய்திகள்
வடக்கின் சுகாதாரப் புரட்சி: முக்கிய கோரிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சர்!

Jun 28, 2026 - 11:00 AM -

0

வடக்கின் சுகாதாரப் புரட்சி: முக்கிய கோரிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சர்!

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ  ஏற்றுக்கொண்டுள்ளார். 

 

ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக்கில் மாவட்டப் பொது  வைத்தியசாலைகளை மாகாண சபையின் கீழ் இயங்குவதைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி விசேட மேலதிக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

 

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று (27.06.2026) மாலை நடைபெற்றது. 

 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

வடக்கு மாகாண சபை மொத்தம் 117 வைத்தியசாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் மத்திய அமைச்சால் நிர்வகிக்கப்படும் மாவட்டப் பொது வைத்தியசாலைகளை, வடக்கில் மாகாண சபையே நிர்வகிப்பதால் நிதிச் சுமை ஏற்படுகிறது. 

 

எனவே, மத்திய அமைச்சு ஏனைய மாவட்டப் பொது வைத்தியசாலைகளுக்குச் செலவிடும் அதே அளவிலான நிதியை வடக்கு மாகாண சபைக்கும் வழங்க வேண்டும். அத்துடன், பராமரிப்பு மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் போதாமையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சின் ஊடாகப் பல வருட மூலதன முதலீட்டுத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.

 

கிளிநொச்சி விசேட பெண்கள் வைத்தியசாலைக்கெனப் புதிதாக அனுமதிக்கப்பட்ட 58 ஆளணிகளில், மத்திய அமைச்சின் கீழுள்ள 45 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணப் பிரிப்பின் பின்னர் வடக்கில் 1,500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இழக்கப்பட்டுள்ளன. 55 பிரதேச வைத்தியசாலைகளில் 34 வைத்தியசாலைகள் தாதியர் இன்றி இயங்குகின்றன. 11 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் அடிப்படை நிலை ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் மருந்தாளுநர்களாக மாற்றப்பட வேண்டிய/நிரப்பப்பட வேண்டிய பகிர்ந்தளிப்பாளர் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

 

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைகளில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் வெற்றிடங்களுக்குத் தற்காலிக இணைப்புகளுக்குப் பதிலாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். தாதியர்கள் கட்டாய சேவையின் பின்னர் வடக்கிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க, அவர்களுக்கான குறைந்தபட்ச சேவைக் காலத்தை நீட்டிக்க வேண்டும்.

வவுனியா வைத்தியசாலையின் பழுதடைந்த சி.ரி.ஸ்கேனரை மாற்றுவதுடன், மன்னார் வைத்தியசாலைக்குப் புதிய சி.ரி. ஸ்கேனர் வழங்கப்பட வேண்டும். தெல்லிப்பழை கதிரியக்கத் தொகுதி மற்றும் செட்டிகுளம் சிறுநீரக நோய் மத்திய நிலையம் போன்ற இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்டங்களை நிறைவு செய்ய உடனடி நிதி தேவை. அத்துடன், பழுதடைந்துள்ள நோயாளர் காவு வண்டிகள் மாற்றப்பட வேண்டும்.

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை 'தேசிய வைத்தியசாலையாக' மாற்றுவதை உறுதியான இலக்காகக் கொண்டு அதன் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணியை மேம்படுத்த வேண்டும். தெல்லிப்பழையை மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டும். மேலும் சங்கானை, சிலாவத்துறை, கோப்பாய் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளின் தரமுயர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

 

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் இணைந்து சிறப்பான முறையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன. மத்திய சுகாதார அமைச்சு இதற்கென ஒதுக்கும் நிதியை மாகாண சபைக்கு வழங்கினால், வேலைத்திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க முடியும், என்றார் ஆளுநர்.

 

ஆளுநரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த சுகாதார அமைச்சர், ஒவ்வொரு விடயத்துக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

 

வடக்கு மாகாணத்தின் தனித்துவமான நிர்வாகச் சுமையைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பராமரிப்புத் தேவைகளுக்கான நிதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கான சி.ரி. ஸ்கேனர் கொள்வனவுக்கான நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலைக்கும் சி.ரி. ஸ்கேனர் கொள்வனவு செய்து வழங்கப்படும்.

 

வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு முன்னதாக, அவற்றின் தற்போதைய தரத்திற்குரிய ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பதே பொருத்தமானது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியாக ஆராயப்படும்.

 

தாதியர் வெற்றிடங்களை இயலுமானவரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், தாதியர் கற்கைநெறிக்குத் தமிழ் மாணவர்கள் விண்ணப்பிப்பது குறைவாக உள்ளதால், இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மன்னார் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மதிப்பீட்டுத் தயாரிப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

 

மேலும், நாடு தழுவிய ரீதியுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவாகக் காணப்படுகின்றமை குறித்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக வடக்கில் பின்பற்றப்படும் வினைத்திறனான நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

 

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமான செயற்கை முறை கருக்கட்டல் சேவை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் இதன்போது ஆளுநரால் விசேடமாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 
 

--


MOST READ

காணொளி
தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!