Jun 30, 2026 - 03:22 PM -
0
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு சில வாரங்களுக்கு முன் தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று (30) வெளியிட்ட வீடியோவில், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த வீடியோவில் எடுத்துக்காட்டிற்காக நாயை குறிப்பிட்டு பேசியதை சிலர் சர்ச்சையாக்கி விட்டனர். அதற்கு நான் எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துவிட்டேன். பிறகு, அரசியலுக்கு வருவதாக இருந்தால் வர வேண்டியதுதானே? அதனை ஏன் மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் பலரும் சொல்கிறார்கள். என் சொந்தங்களிடம் நான் கேட்பது போலத்தான் மக்களிடமும் கேட்கிறேன். நீ அறக்கட்டளையை மட்டும் பார், அரசியலுக்கு வர வேண்டாம் என்று மக்கள் நினைத்தால். அதனால்தான் அவர்களிடம் கேட்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது என்றார்.
மேலும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், பலரும் என்னை திருச்சி கிழக்கில் போட்டியிட கூறுகிறார்கள். நாங்கள் இருக்கிறோம், தைரியமாக போட்டியிடுங்கள் என்று கூறுகிறார்கள். இதை கேட்கும் போது சந்தோஷமாக தான் உள்ளது. ஆனால் திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுவது தர்மமாக இருக்காது. பல வருடங்களாக கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கும் போது நான் போட்டியிடுவது சரியாக இருக்காது.
முதலமைச்சர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர் தான் வெற்றி பெறுவார்கள். ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பணியாற்றி பிறகுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். பிறகு, கட்சியின் தலைமை பார்த்து ஒரு பதவி கொடுக்க வேண்டும். நான் திருச்சி கிழக்கில் தான் போட்டியிடமாட்டேன் என்று சொன்னேன். வேறு எங்கும் போட்டியிடமாட்டேன் என்று சொல்லவில்லை.
மேலும் பொறுமையாக இருப்போம். அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். மக்கள் பிரச்னைக்காக நிற்போம். நிதானமாக சிந்தித்து அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

