Jul 11, 2026 - 07:49 PM -
0
கல்விசார் தொழில்முறை சபையை ஸ்தாபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, அமைச்சரவையின் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (10) கூடிய கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த அறிக்கை அமைச்சரவைக்கு அனுப்பப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கைக்கு, கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு நேற்று அங்கீகாரம் வழங்கியது.
பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்னவின் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவின் அறிக்கையானது, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அங்கு பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவின் தலைமையிலான கல்விசார் தொழில்முறை சபையை ஸ்தாபிப்பதற்கான பாராளுமன்ற உபகுழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நாட்டின் கல்வியின் தரம் மற்றும் தொழில்முறைத்தன்மையை மேம்படுத்துவதற்கு, முன்மொழியப்பட்டுள்ள கல்விசார் தொழில்முறை சபை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று குறிப்பிட்டார்.
