Jul 14, 2026 - 10:44 AM -
0
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் என்ற ஒஸ்மான் குணசேகரவின் மகனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் ஆதித்ய பால படபெதிகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா, இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த ஷெஹான் குணசேகர என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி அமில குமார ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தான் தொழில் ரீதியாக ஒரு வர்த்தகர் என்றும், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தனது தந்தை கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி தனது தந்தையின் வீட்டைச் சோதனையிட்டு இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தத் துப்பாக்கிகளுக்கு சட்டப்பூர்வ உரிமம் இருந்ததாகச் சுட்டிக்காட்டிய மனுதாரர், எனினும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருகை தந்து வாக்குமூலம் அளிக்குமாறு தனக்கும் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மனுதாரர், தான் பல சந்தர்ப்பங்களில் அந்தப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார்.
அங்கு, கெஹெல்பத்தர பத்மே தாய்லாந்தில் இருந்தபோது அவருடன் தொடர்புகளைப் பேணினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அச்சுறுத்தும் தொனியில் தன்னிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதால், தன்னைக்கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கு மனுதாரர் சார்பில், சட்டத்தரணி அமில குமாரவின் அறிவுறுத்தலின் பேரில், சட்டத்தரணி ருக்ஷான் சேனாதீரவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன், சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது முன்னிலையாகியிருந்தார்.
