Jul 14, 2026 - 02:23 PM -
0
கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரச் செயல்பாட்டின் கண்ணாடி மட்டுமல்லாது, அந்தத் தேசத்தின் அடையாளத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 14 ஆவது உலகக் கட்டுமான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
14 ஆவது உலகக் கட்டுமான மாநாடு அண்மையில் கொழும்பில் ஆரம்பமானதுடன், அதற்கு இணையாக விருது வழங்கும் விழாவொன்றும் நடைபெற்றது.
'SUSTAINABILITY AWARD 2026' என பெயரிடப்பட்டிருந்த இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கலந்துகொண்டிருந்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர,
"கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரச் செயல்பாட்டின் கண்ணாடி போன்றதாகும். அத்துடன் அது ஒரு தேசத்தின் அடையாளத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது. இலங்கையில் அந்த கௌரவம் எமது கட்டுமானத் துறைச் சார்ந்தவர்களுக்கே சார வேண்டும்.
நிலைபேண்தகைமை என்பது எமது தேசத்தினதும் எமது வாழ்வினதும் ஒரு பகுதி என்று நாம் உலகிற்கு பெருமையுடன் கூற முடியும். நிலைபேண்தகு தன்மையைக் கொண்ட கட்டுமானத் துறையின் பங்காளிகளாக மாறுவதற்கு நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தோம்.
எனினும், ஏனைய உள்கட்டமைப்பு வசதிகள், நிதி பலம் மற்றும் அதிகாரம் போன்றன நம்மிடம் இல்லாத காரணத்தினால் அதனை இதுவரை செயல்படுத்த முடியாமல் போனது. எமது தாய்நாட்டின் எதிர்காலம் அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கும் என்று நான் பலமாக நம்புகிறேன்.
அங்கு எமது படைப்பாற்றலை மாத்திரமன்றி, எமது சூழலைப் பாதுகாப்பதற்கும், எமது விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் நிலைபேண்தகு எண்ணக்கருவை பாதுகாப்பதற்கும் எமது அர்ப்பணிப்பை உலகிற்கு வெளிப்படுத்த முடியும். கட்டுமானத் துறை சார்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு எனக்கு அழைப்பு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.
இறுதியாக 2021 ஆம் ஆண்டில் நான் மேடையில் ஏறிய போது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து எதிர்வு கூற முற்பட்டு ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டேன். தற்போது என்னால் அதனை மீண்டும் செய்ய முடியாது. ஏனெனில், நான் இப்போது உத்தியோகபூர்வமாகவே ஒரு அரசியல்வாதி ஆவேன்" என்றார்.
