Jul 15, 2026 - 09:14 AM -
0
LMD இதழின் 2026 ஆம் ஆண்டுக்கான மிகவும் நேசிக்கப்படும் வர்த்தகநாமங்கள் ஆய்வில், சேவை வர்த்தகநாமங்கள் பிரிவில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட கொமர்ஷல் வங்கி, இலங்கையின் வங்கித்துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த சேவை வர்த்தகநாமங்களின் தரவரிசையிலும் இவ்வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
PepperCube Consultants நிறுவனம், LMD இதழின் வாசகர்களிடையே நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில், நிறுவன, தயாரிப்பு வர்த்தக நாமங்கள், சேவை வர்த்தக நாமங்கள் மற்றும் புதிய வர்த்தகநாமங்கள் உள்ளிட்ட 45 துறைகளில் வர்த்தகநாமங்களின் மீதான மக்களின் விருப்பமும் பற்றுறுதியும் மதிப்பிடப்பட்டன. தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகள் எனப் பிரிக்கப்பட்டிருந்த வங்கித் துறையில், கொமர்ஷல் வங்கி தனியார் வங்கிகளில் முன்னிலை பெற்று, மிகவும் நேசிக்கப்படும் வங்கியாகத் தெரிவாகியுள்ளது.
இந்த அண்மைய அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, தொடர்ச்சியாக மிகவும் நேசிக்கப்படும் வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்படுவதென்பது எமக்கு மிகுந்த பணிவையும் அதேவேளை ஆழமான முக்கியத்துவத்தையும் தருகிறது. ஏனெனில் இது எமது வாடிக்கையாளர்களுடனான நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டின் ஊடாக காலப்போக்கில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் உணர்வுபூர்வமான பிணைப்பைப் பிரதிபலிக்கின்றது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாறிவரும் ஒரு சூழலில், நாம் எமது அடிப்படை நோக்கத்தில் உறுதியாக நிலைத்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொண்டு அவர்களுக்குச் சேவையாற்றுவதற்காக எங்களைத் தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகின்றோம். நம்பகத்தன்மை, சேவைச் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பு, இலங்கை மக்களின் மனங்களில் தொடர்ந்து வலுவாக எதிரொலிப்பதை இந்தத் தரவரிசைகள் உறுதிப்படுத்துகின்றன என்றார்.
கொமர்ஷல் வங்கி இந்த தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையின் தொடர்ச்சியான வெற்றியை பிரதிபலிக்கிறது. சேவைச் சிறப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் ஈடுபாடு ஆகியவற்றில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முதலீடுகளே இதற்கு வலுசேர்க்கின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு உரிய பதிலளிப்பதையே வங்கியின் செயற்பாட்டு அணுகுமுறை முதன்மையாகக் கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் மனநிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வங்கியின் அனைத்து செயற்பாடுகளிலும் தேவையான மேம்பாடுகள் விரைவாகவும் திறம்படவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பேராதரவினால் வங்கியீட்டிய சமீபத்திய அங்கீகாரங்களின் தொடர்ச்சியாகவே இந்த புதிய விருதும் கிடைத்துள்ளது. 2026 ஆம் SLIM Kantar மக்கள் விருதுகள் நிகழ்வில், தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் ஆண்டின் மக்களின் தெரிவு தனியார் வங்கிச் சேவை வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டமை இதில் உள்ளடங்குவதுடன், இது நாட்டின் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கியாக இவ்வங்கியின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
