Header Logo
Mogo Academy

வணிகம்
பாதுகாப்பிற்கான பாதையை வரைதல்: சட்டவிரோத கடல்வழி இடம்பெயர்வுக்கு எதிரான மாணவர்களின் புத்திக்கூர்மையை எடுத்துக்காட்டிய 2026 ‘Zero Chance’ விருதுகள்

Jul 15, 2026 - 09:22 AM -

0

பாதுகாப்பிற்கான பாதையை வரைதல்: சட்டவிரோத கடல்வழி இடம்பெயர்வுக்கு எதிரான மாணவர்களின் புத்திக்கூர்மையை எடுத்துக்காட்டிய 2026 ‘Zero Chance’ விருதுகள்
Mobitel inner

சட்டவிரோத கடல் வழி பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய முயற்சிப்பது மிகவும் அபாயகரமான மற்றும் விவேகமற்ற ஒரு செயலாகும் எனும் முக்கிய விழிப்புணர்வுச் செய்தியை வலியுறுத்தி, நான்காவது வருடமாக நடத்தப்பட்ட 'Zero Chance’ (ஏமாறாதிருப்போம் வழிதவறாதிருப்போம்) சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டியின் மாபெரும் விருது வழங்கும் விழா 2026 ஜூலை 11 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) கோலாகலமாக இடம்பெற்றது. 

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிக்கு, கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி காரணமான அனர்த்த சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்திருந்தது. நாட்டின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 42 பாடசாலைகளிலிருந்து 1,036 சித்திரங்கள் மற்றும் 1,229 கட்டுரைகள் உள்ளிட்ட மொத்தமாக 2,265 ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கான விருது வழங்கும் விழாவின் போது, முதல் மூன்று இடங்களைப் பெற்ற 164 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்ற 55 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்தியு டக்வோர்த் (H.E. Mr. Matthew Duckworth) சார்பாக, பதில் பிரதி உயர் ஸ்தானிகர் ஷாரினி மெக்ஈவன் (Ms. Sharini McEwan) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். 

மாணவர்களின் நெகிழ்வுத் திறன் குறித்து பதில் பிரதி உயர் ஸ்தானிகர் மெக்ஈவன் கருத்துத் தெரிவிக்கையில், “பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தமது வாழ்வாதாரத்தையும், உயிரையும் பணயம் வைப்பதைத் தடுக்கும் மிக முக்கியமானதொரு செய்தியை, உங்களது படைப்பாற்றல்கள் மூலம் பரந்த அளவிலான மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உதவியுள்ளீர்கள். சவால்கள் என்பவை, உங்களை நீங்களே நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சவால்களை எதிர்கொண்டு சிறப்பாகச் செயற்படுவதற்கான உங்கள் திறனுக்கு, இப்போட்டியில் நீங்கள் பெற்ற சாதனைகள் ஒரு சான்றாகும்.” என்றார். 

சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்களைப் பார்வையிட்ட அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்தியு டக்வோர்த், பங்கேற்பாளர்களுக்கான தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார். “இந்த இளம் பங்கேற்பாளர்களின் அசாத்திய புத்திக்கூர்மை, நுண்ணறிவு, நேர்மையைக் காண்பது மிகவும் நெகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. அவர்கள் சமாதானத்திற்கான சகவாழ்வை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டவிரோத குடியேற்றத்தின் அபாயங்கள் குறித்து மிகவும் முதிர்ச்சியுடன், விழிப்புணர்வுடனான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.” என அவர் குறிப்பிட்டார். 

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இலங்கையின் கல்வித் துறைக்கும் இடையிலான இந்த கூட்டுறவானது, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கருத்துத் தெரிவிக்கையில், “நாடுகளுக்கு இடையிலான சட்டபூர்வமான குடியேற்றம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், சட்டவிரோத குடியேற்றத்திற்கு முயற்சிப்பது, அதற்கு உதவுவது அல்லது ஊக்குவிப்பது ஆகியன மிகவும் தீங்கு விளைவிக்கும் செயல்” என வலியுறுத்தினார். மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவைப் பேணவும், உயிர் மற்றும் உடைமைச் சேதங்களைத் தடுக்கவும் இத்தகைய கூட்டு சமூக விழிப்புணர்வு முயற்சிகளின் வெற்றியை காண்பதானது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்கள் கல்வி அமைச்சின் விசேட நடுவர் குழாமினால் மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், இப்போட்டியானது மாணவர்களின் பகுப்பாய்வு மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்தது. சான்றிதழ்களுக்கு மேலதிகமாக, தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் தங்களது திறன்கள் மற்றும் கலை சார்ந்த திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 

சட்டவிரோத குடியேற்றத்தின் அபாயங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் அத்தியாவசியமான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவின் முக்கிய தூணாக இந்த ‘Zero Chance’ போட்டி தொடர்ச்சியாக விளங்கி வருகிறது. 

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.australia.gov.au/zerochance எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara